தக்காளி சாதம் செய்ய சீரக சம்பா அரிசிக்கு பதில், பாஸ்மதி அரிசி, பச்சரிசி, சாதாரண சாப்பாட்டு புழுங்கல் அரிசியிலும், இந்த தக்காளி சாதத்தை செய்யலாம். ஆனால் அதற்கு உண்டான தண்ணீரின் அளவையும் விசில் அளவையும் மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி - 2 கப்
லவங்கம் - 3
பட்டை - ஒரு துண்டு
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 2
புதினா - 1 கைப்பிடி
பொடியாக நறுக்கிய - 5 தக்காளி
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 1/2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் 2 கப் அளவு சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவி விட்டு, தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 2 கப் அளவு சீரகசம்பா அரிசிக்கு, 3 கப் அளவு தண்ணீர் நமக்கு தேவைப்படும். எந்த கப்பில் அரிசியை அளந்து எடுத்துக் கொண்டீர்களோ, அதே கப்பில் தண்ணீரை அளந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, 3 ஸ்பூன் சமையல் எண்ணெய், 1 ஸ்பூன் நெய் ஊற்றி, அது காய்ந்ததும் லவங்கம், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை , நீளவாக்கில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், புதினா கைப்பிடி, இந்த பொருட்களை போட்டு வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.
அதன் பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி பழம் நன்றாக வெந்து வரும் வரை வதக்கி விடுங்கள். அடுத்தபடியாக மிளகாய்த் தூள், மல்லித் தூள், பிரியாணி மசாலா, உப்பு பிரியாணிக்கு தேவையான அளவு போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து வதக்கினால், நாம் ஊற்றிய எண்ணெய் மேலே கசிந்து வரும். அப்போது 3 ஸ்பூன் அளவு தயிரை ஊற்றி ஒரு நிமிடம் போல மீண்டும் நன்றாக கலந்து விடுங்கள். அடுத்தபடியாக எடுத்து வைத்திருக்கும் 3 கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதி வரட்டும். உப்பு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், ஊற வைத்திருக்கும் அரிசியை, தண்ணீரை வடிகட்டி குக்கரில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். அதாவது 5 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு கொதிக்க விடவேண்டும்.
அதன் பின்பு குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விடவேண்டும். 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒரே ஒரு விசில் மட்டும் வந்தவுடன், அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் சூப்பரான தக்காளி சாதம் தயார்.