பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் அதன் ஊழியர்களில் 20 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக பிரபல நிறுவனங்களான மெட்டா, ட்விட்டர் உள்ளிட்டவை தங்கள் பணியாளர்கள் பலரை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், அந்த வரிசையில் அமேசானும் இணைந்துள்ளது. சமீபமாக உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த பணிநீக்கம் நடப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக அமேசான் 10 ஆயிரம் பணியாளர்களை நீக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 20 ஆயிரம் பணியாளர்களை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நிலை பணியாளர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து துறைகளிலும் இந்த பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அமேசான் வரலாற்றிலேயே ஒரே சமயத்தில் இவ்வளவு அதிகமான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்தப்படும் பணி நீக்க நடவடிக்கைகளால் ஐடி ஊழியர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.