இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையீட்டின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இருதரப்பு பேச்சு வார்த்தையில் இஸ்ரேல் அரசு சிறையில் அடைத்துள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால், இஸ்ரேலிய பணையக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என பேசிக் கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் இருதரப்பிலும் முதல் கட்டமாக நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டு கைதிகளும், பணையக்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் மேலும் சில பணையக்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து மூன்றாவது கட்ட தற்காலிக போர் நிறுத்தத்தை கொண்டு வர கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயன்றன.
ஆனால் அதற்கு செவி சாய்க்காத இஸ்ரேலும், ஹமாஸும் மீண்டும் போரில் இறங்கியுள்ளன. 6 நாட்கள் கழித்து மீண்டும் போர் தொடங்கியுள்ள நிலையில் காசா பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. காசா பகுதிக்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் தரைப்படைக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.