சீனா – தைவான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் தைவான் எல்லையில் சீனா போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1949 முதல் சீனாவுக்கு அருகே உள்ள தனித்தீவு நாடான தைவான் தனிநாடாக இயங்கி வருகிறது. ஆனால் சீனா தைவானை தனது நாட்டின் ஒரு தன்னாட்சி பெற்ற பிராந்தியம் என வாதிட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானை தனி நாடாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரித்துள்ள நிலையில் சீனா – தைவான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் தற்போது தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், சீனாவின் 23 போர் விமானங்கள், 4 போர்க்கப்பல்கள் தைவான் எல்லைகளில் இன்று சுற்று போட்டு திரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் ஜலசந்தியின் இடைநிலைக்கோடு பகுதியையும் கடந்து அவை வந்ததாக கூறியுள்ள தைவான் நிலமையை கண்காணிக்க வான் மற்றும் கடல் ரோந்து பணியை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்து வரும் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உலக நாடுகளை கவலைகொள்ள செய்துள்ள நிலையில் தற்போது சீனா – தைவான் இடையே நிலவும் போர் சூழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.