இந்தோனேசியா பெண் ஒருவரை முதலை ஒன்று கடித்துக் குதறிக் கொன்றுள்ளது. 44 வயதாகும் டீசி டுவோ, தான் வேலை செய்யும் பண்ணையில், சட்டத்துக்கு புறம்பான வகையில் வளர்க்கப்படும் முதலைக்கு உணவு கொடுக்க சென்றபோது கடித்து குதறப்பட்டதாக கூறப்படுகிறது.
700 கிலோ எடை கொண்டிருக்கும் மெரி எனப் பெயரிடப்பட்டுள்ள முதலை அப்பெண்ணின் கையை கடித்துள்ளது மேலும் வயிற்றின் பெரும்பாலான பகுதியைக் கடித்துக் குதறியுள்ளது. தற்போது முதலைகளுக்கான பாதுகாப்பான தளமொன்றுக்கு மெரி அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த பண்ணையின் உரிமையாளரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
பண்ணையின் ஆய்வக தலைவரான டுவோ கடந்த ஜனவரி 10 ஆம் தேதி மெரிக்கு உணவளிக்க சென்றார். அப்போது வேலியை தாண்டி முதலை இருக்கும் பகுதிக்குள் விழுந்துவிட்டார். அடுத்த நாள் காலையில்தான் சக ஊழியர்கள் அப்பெண்ணின் உடலை கண்டறிந்தனர்.
செய்தியின்படி, அப்பெண்ணின் உடல் பாகங்கள் இன்னமும் 4.4 மீட்டர் நீளம் உள்ள அந்த முதலையின் இரைப்பைக்குள் இருக்கக்கூடும் என அதிகாரிகள் நம்புகின்றனர். உலகம் முழுவதும் முதலைகளால் ஆண்டுக்கு ஆயிரம் பேராவது மரணமடைகிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சுறாக்கள் தாக்கி மனிதர்கள் மரணமடைவதை விட இந்த எண்ணிக்கை அதிகமாம்.