340 வருடங்களுக்கு முன்பு சாத்தானுக்கு தன்னை ஒப்புகொடுத்த கன்னியாஸ்திரி ஒருவர் எழுதிய கடிதத்தை மொழிபெயர்த்து வருகிறார்கள் மொழியியலாளர்கள்.
இத்தாலியின் மோண்டசியரா தேவாலயத்தில் வாழ்ந்து வந்தவர் கன்னியாஸ்திரி மரியா டெல்லா கசியோன். 1676ஆம் ஆண்டு ஆகஸ்டு 11ம் நாள் தனது படுக்கையறையில் உள்ள எழுதும் மேசையின் மீது இறந்து கிடந்தார் மரியா. அவர் முகத்தில் எழுதும் மை அப்பியிருந்தது. அவரது சடலத்தின் அருகே ஒரு கடிதம் கிடந்தது. அதில் சங்கேத குறியீடுகளில் சில வாசகங்கள் எழுதியிருந்தன. அதை புரிந்து கொள்ள முடியாததால் அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
ஆனால் மரியாவின் வாழ்க்கை பற்றி தெரிந்ததும் அந்த கடிதத்தை கண்டு அனைவரும் பயப்பட தொடங்கினார்கள். 1641ல் இசபெல்லா தொமாசி என்பவருக்கு பிறந்தவள்தான் மரியா. இசபெல்லா சாத்தான் வழிபாட்டில் நம்பிக்கையுடையவராய் இருந்ததால் அவரை அந்த ஊரை விட்டு விரட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் கணவரை விட்டு பிரிந்து தனது மகளுடன் இசபெல்லா மிலான் வந்ததாகவும் கூறப்படுகிறது.
15 வயதில் மரியா கிரேக்கம், லத்தீன், அரபிக் போன்ற பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறாள். பிறகு கன்னியாஸ்திரியாக மோண்டசியாரா தேவாலயத்தில் சேர்ந்திருக்கிறாள் மரியா. அதற்கு பிறகுதான் பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது. யாருடனும் நெருங்கி பழகாத மரியா தனிமையில் அடிக்கடி ரகசிய வழிபாடுகள் செய்வதை அவருடன் இருக்கும் மற்ற கன்னியாஸ்திரிகள் கவனித்திருக்கின்றனர். வழிபாட்டின்போது புரியாத மொழியில் பேசுவதையும் அவர்கள் கவனித்திருக்கின்றனர்.
அந்த பகுதி மக்களிடையே அவள் சாத்தான் வழிபாடு செய்கிறாள் என்ற பேச்சு பரவலாக வலம் வரத் தொடங்கியது. அடிக்கடி சில மிருகங்களை பலி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியெல்லாம் செய்து சாத்தானிடமிருந்து பெற்ற தகவல்களை ஒரு ரகசிய மொழியில் அவர் அந்த தாளில் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதை மொழிப்பெயர்த்தால் நிகழக்கூடாத அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறும் என மக்கள் பயந்தனர். அதனால் அதை அந்த தேவாலயத்தின் ஒரு பகுதியில் பூட்டி வைத்தனர். காலங்கள் ஓடின. ஒரு சில மொழியியலாளர்கள் அதை மொழிப்பெயர்த்து படிக்க ஆவல் கொண்டு முயற்சி செய்தனர். அதில் சிலர் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், சிலர் புத்தி பேதலித்து போனதாகவும் கூறப்படுகிறது.
இதனாலேயே மரியா அதில் என்ன எழுதியிருக்கிறார் என்பது அறியப்படாத ரகசியமாகவே இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் சிலர் இணையத்தில் உள்ள டார்க் வெப் பகுதியின் சங்கேத குறியீடுகளை பயன்படுத்தி சில வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்த்திருப்பதாக கூறியுள்ளனர்.
அதாவது அவர்கள் மொழிபெயர்த்தபடி அதில் “கடவுள் மனிதர்களை விடுவிப்பார் என நினைக்கிறார்கள். ஒருவேளை இப்போது இல்லை என்றாலும் ஸ்டைக்ஸ் நிச்சயம்” என்று உள்ளதாம். ஸ்டைக் என்பது கிரேக்க குறிப்பின்படி பூமிக்கும் பாதாளத்துக்கும் இடையே பாயும் நதியை குறிப்பது. இது உலக அழிவைதான் குறிக்கிறது என்று பலரும் நம்புகிறார்கள்.
ஆனால் சிலரோ இல்லை அவர்கள் சரியாக மொழிபெயர்க்கவில்லை. அப்படி மொழிபெயர்த்திருந்தால் அதை சொல்ல அவர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் என கூறுகிறார்கள். இப்படியாக இன்னமும் நீடித்து வருகிறது அந்த “சாத்தனின் கடிதம்” தொடர்பான மர்மங்கள்.