சீனாவில் மாலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஏராளமான மக்கள் மீது ஒருவர் காரை ஏற்றிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கவ்ங்டங் மாகாணத்தில் குஹாய் நகரில் விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. நேற்று மாலை 7 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள நடமாடும் சாலையில் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அங்கு காரை வேகமாக ஓட்டி வந்த 62 வயதான பென் என்ற நபர் அங்கு உடற்பயிற்சி செய்தவர்களை காரால் மோதி நசுக்கியபடி வேகமாக சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவ இடம் விரைந்த போலீஸார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய 62 வயது நபரையும் கைது செய்த நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விவகாரத்தால் ஏற்பட்ட சொத்து பங்கீட்டினால் மன உளைச்சலில் இருந்த பென் தனது காரை மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K