கருப்பினத்தவரை கொன்றதற்காக நடைபெறும் போராட்டத்தில் நாயை ஏவி விட்டிருப்பேன் என அதிபர் ட்ரம்ப் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை அம்மாகாண காவலர்கள் வன்முறையாக நடத்தியதால் அவர் இறந்தார். போலீஸாரின் இந்த செயலை கண்டித்து மினசோட்டாவில் போராட்டம் வெடித்தது. அதை தொடர்ந்து நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டெல்லாஸ் என அமெரிக்காவின் பல மாகணங்களிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் சிலர் அமெரிக்க வெள்ளி மாளிகை முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய அதிபர் ட்ரம்ப் “போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த என்னை அனுமதித்திருந்தால் நாய்களை ஏவிவிட்டு அவர்களை விரட்டியடித்திருப்பேன். ஆனால் அதிகாரிகள் சிறப்பாக இந்த விவகாரத்தை கையாண்டனர்” என கூறியுள்ளார்.
இதனால் ட்ரம்புக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், பாதுகாப்புக்காக அதிகாரிகள் அதிபர் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் உள்ள பதுங்கு குழிக்குள் கொண்டு சென்றதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. போர்களின் போது அதிபரை காக்க வடிவமைக்கப்பட்டது இந்த பதுங்கு குழி என்பது குறிப்பிடத்தக்கது.