துவாரகா பெயரில் வெளிவந்த காணொளியை நிராகரிக்கிறோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“துவாரகா பெயரில் வெளிவந்த காணொளியை நிராகரிக்கிறோம்! தமிழீழத் தேசிய மாவீரர் நாளில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களது புதல்வி துவாரகாவின் பெயரில் வெளிவந்த காணொளியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது.
கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்கள், தரவுகளின் அடிப்படையிலும், எமது அவதானங்களின் வழி நின்றும் இம் முடிவினை நாம் எடுத்துள்ளோம். தமிழீழத் தேசியத் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் உலகத் தமிழ் மக்கள் தங்கள் இதயங்களில் அன்போடும், மதிப்போடும் வைத்திருக்கின்றார்கள் எனவேதான் அவரது மகளாக வேறு ஒருவரை முன்வைப்பது எங்கள் உள்ளங்களில் பெரும் வேதனையை ஏற்படுத்துகின்றது.
பொதுவெளியிலும், பொதுத்தளத்திலும் தமிழ்மக்கள் இவ்விடயத்தினை நிராகரித்திருந்தமை நம்பிக்கையினை தந்துள்ளதோடு, தகுந்த பதிலடியாகவும் அமைந்துள்ளது. இதே வேளை இவ்விவகாரத்தினை பேசுபொருளாக கொண்டு கையாளுகின்ற சமூக ஊடகங்களை பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும் வேண்டுகின்றோம். விழிப்பே அரசியலின் முதற்படி என்ற தமிழீழத் தேசியத் தலைவரது வாக்கை நாம் அனைவரும் நினைவிருத்தி, தொடர்ந்தும் விழிப்புடன் செயற்படுவோம்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது