உலக செல்வந்தர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளியிருக்கிறார் எலான் மஸ்க்.
சமீப காலமாக அம்பானியின் ஜியோ நிறுவனத்துடன் பேஸ்புக், சில்வர்லேக் உள்ளிட்ட வெளிநாட்டு கம்பெனிகள் பங்குதாரர்களாக இணைந்துள்ளதால் எஊ.1,15,693 கோடிக்கு ஜியோ பங்கு உயர்ந்துள்ளது. இதனால் கிடுகிடுவென அம்பானி நிறுவனங்களின் பங்கு உயர்ந்ததால் அம்பானியில் சொத்து மதிப்பில் 24 பில்லியன் டாலர்கள் உயர்ந்து 64.5 பில்லியன் டாலர்கள் ஆனது. இதனால் உலக பணக்காரர்களின் முதல் 10 பேர் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி. 7வது இடத்தில் கூகிள் நிறுவனத்தின் சர்ஜே பிரன் இருந்தார். ஒன்பதாவது இடத்தில் வாரன் பஃபெட் இருந்தார்.
இந்த மதிப்பை ஒரே வாரத்தில் உடைத்துள்ளார் ரியல் லைஃப் அயர்ன் மேன் என வர்ணிக்கப்படும் எலான் மஸ்க். டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு மையம் என பல தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வகித்து வரும் எலான்மஸ்க் 70.5 பில்லியன் டாலர்களுடன் 8வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் முகேஷ் அம்பானி 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நாசாவுடன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.