பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவியேற்க உள்ளார்.
கடந்த மாதம் 25 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்தது.
117 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் கட்சி, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியானது. இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமாக ஆகஸ்ட் 11 ஆம் தேதி பதவியேற்பார் என செய்திகள் வெளியானது.
ஆனால், பதவியேற்பில் எதிர்கட்சிகளால் சில குழப்பம் ஏற்பட்டது. ராணுவத்தின் பலத்தால் தேர்தல் முடிவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பொம்மை அரசாங்கம் அமைவதை கடுமையாக எதிர்க்கிறோம் என எதிர்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பதவியேற்பு தள்ளிவைக்கப்பட்டது.
இதனையடுத்து இம்ரான் கான் பிரதமராக ஆகஸ்ட் 18 ஆம் தேதி பதவி ஏற்று கொள்வார் என தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைமையகம் செய்தி வெளியிட்டது.
அதன்படி ஆகஸ்ட் 18 ஆம் தேதியான இன்று இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் இம்ரான் கானுக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.