நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளின் தொடர்பு இருப்பதை நிரூபிக்க தன்னிடம் ஆதாரம் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார்.
சீக்கிய காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த நிஜ்ஜார் சிங் என்பவர் கனடாவில் வசித்து வந்த நிலையில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நிலையில் விரிசல் ஏற்பட்டது.
தற்போது இந்திய தூதரக அதிகாரிகளை விசாரிக்க போவதாக கனடா அரசு கூறிய நிலையில் கனடாவிலிருந்து தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றதுடன், இந்தியாவிலிருந்து கனடா தூதர்களையும் திரும்ப அனுப்புவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பொது விசாரணை ஆணையத்தில் பதில் அளித்த ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அதிகாரிகளுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்த எந்த ஆதாரமும் தன்னிடம் இல்லையென்று ஒப்புக் கொண்டுள்ளார். உளவுத்தகவலின் அடிப்படையிலேயே விசாரணை நடத்த முன் வந்ததாகவும், ஆனால் அதற்கு இந்தியா ஒத்துழைக்காததால் ஆதாரத்தை திரட்ட இயலவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் குறித்து கருத்து வேறுபாடு கொண்டுள்ள கனடா நாட்டவர்கள் குறித்த தகவல்களை இந்திய தூதர்கள் சேகரித்து இந்திய அரசுக்கும், லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலுக்கும் அனுப்பியதாகவும், இதில் இந்தியாவின் ஈடுபாடு உள்ளது தெளிவாக உள்ளதாகவும் கனட உளவுத்துறை தெரிவித்ததாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K