வடகொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும், வார்த்தை யுத்தமும் நிலவி வந்தது.
வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால், தென்கொரியாவில் நடந்த குளிர்கால தொடர் இந்த பிரச்சனைகளை மாற்ற முற்பட்டது.
அதன் எதிரொலியாக, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய அதிபர் கிம் விருப்பம் தெரிவித்தார். டிரம்பும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். கடந்த 18 ஆண்டுகளில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கப்போவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்நிலையில் டிரம்ப், கிம் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக அமெரிக்க உளவுப்படை சி.ஐ.ஏ.யின் தலைவர் மைக் போம்பியோ வடகொரியாவிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆனால், இந்த தகவல் தற்போது ஊடகங்களில் கசிந்துள்ளது. இந்த ரகசிய பயணத்தின் சில தினங்களுக்கு முன்னர்தான் அமெரிக்க வெளியுறவு மந்திரி பதவியில் இருந்து ரெக்ஸ் டில்லர்சனை நீக்கி விட்டு, அவரது இடத்தில் சி.ஐ.ஏ.யின் தலைவர் மைக் போம்பியோவை நியமிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.