பூமியின் இயற்கை வளத்திற்கு ஆபத்தாக மாறியுள்ள பிளாஸ்டிக் தற்போது தாய்பாலிலும் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளாஸ்டிக் பயன்பாடு இயற்கைக்கும், மனிதனுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலாக மாறி வருகிறது. பிளாஸ்டிக் குப்பைகளால் மண் வளம் பாதிக்கப்படுவதுடன், கடலில் கலப்பதால் கடல் உயிரினங்கள் ப்ளாஸ்டிக்கால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
இந்த ப்ளாஸ்டிக் நீரையும், நிலத்தையும் மட்டுமல்ல மனிதர்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது சமீப காலமாக அறிவியல் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன. சில மாதங்கள் முன்னதாக மனிதனின் ரத்தத்தில் ப்ளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தூய்மையின் அடையாளமாக கருதப்படும் தாய் பாலிலும் ப்ளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளது. இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானிகள் ரோம் நகரில் குழந்தை பெற்று ஒரு வாரமான தாய்மார்களின் தாய்ப்பாலை ஆய்வு செய்ததில் 75% பாலில் மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதை கண்டறிந்துள்ளனர். சுற்றுசூழலை பாதித்து வந்த ப்ளாஸ்டிக் தற்போது நுண் துகளாக மனித உயிருக்கே அச்சுறுத்தலாக மாறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.