உக்ரைனை ரஷ்யா தொடர்ந்து தாக்கி வரும் நிலையில் உக்ரைனுக்கு உதவ ஜப்பான் முன்வந்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த சில காலமாக ரஷ்யா தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விடாமல் தொடர்ந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடி வருகிறார். ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட்டு வரும் உக்ரைன் படைகளுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா ஆகியவை பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது ஜப்பானும் உக்ரைனுக்கு உதவிகரம் நீட்டியுள்ளது. இதுகுறித்து ஜப்பான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் ”உக்ரைன் ராணுவத்திற்கு ஜப்பான் என்.பி.சி கவச உடைகள், முகக்கவசங்கள், ட்ரோன்களை வழங்க முடிவு செய்துள்ளது. தங்கள் நாட்டை பாதுகாக்க போராடும் உக்ரைனியர்களுக்கு ஜப்பான் அரசு தங்கள் ஆதரவை தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.