இத்தாலியில் கடந்த 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரபல மாபியா கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இத்தாலியில் 1980 முதலாகவே மாபியா கும்பல்களின் அட்டூழியம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மாபியாக்களை ஒழிப்பதற்கான முயற்சியில் இத்தாலி அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அவ்வாறாக கடந்த 1990கள் முதலாக இத்தாலியை அச்சுறுத்தி வந்த மாபியா கும்பல் தலைவன்தான் மேட்டியோ மெஸ்சினா டினாரோ. பல்வேறு கொலை, கொள்ளை, வெடிகுண்டு சம்பவங்களில் தொடர்புடையவன் இந்த டினாரோ. கடந்த 1992ம் ஆண்டில் மாபியாக்களை ஒழிப்பதற்காக நியமிக்கப்பட்ட இரண்டு வழக்கறிஞர்களையே கொலை செய்தவன் டினாரோ என கூறப்படுகிறது. டினாரோவின் குற்றங்களை தொகுத்து தி லாஸ்ட் காட்பாதர் என்ற ஆவணப்படமே வெளியாகியுள்ளது.
அத்தோடு மட்டுமல்லாமல் தனக்கு போட்டியாக வரக்கூடிய மற்ற மாபியா கும்பல் தலைவன்களையும் 20 பேருக்கும் மேல் கொன்றுள்ளான் டினாரோ. பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட டினாரோ பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தான். அவனை தேடி யூரோபோல் அமைப்பு தேடப்படும் நபர்கள் பட்டியலில் அவனை இடம்பெற செய்தது.
இந்நிலையில் டினாரோ இத்தாலி அருகே உள்ள சிசிலி தீவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் அந்நாட்டின் ராணுவ போலீஸ் படைப்பிரிவு சிசிலி தீவுக்குள் புகுந்து மருத்துவமனை ஒன்றில் இருந்த டினாரோவை கைது செய்தது. அந்த மருத்துவமனையில் டினாரோ முகமாற்று அறுவை சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது.
சில நாட்கள் தாமதமாக சென்றிருந்தாலும் டினாரோ தனது முகத்தை மாற்றிக் கொண்டு தப்பியிருப்பான் என கூறப்படுகிறது. டினாரோ பிடிப்பட்டது குறித்து இத்தாலி பிரதமர் மெலோனி மற்றும் பாதுகாப்பு மந்திரி கைடோ கிரோசொட்டோ ஆகியோர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.