440க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய புதைகுழியை உக்ரேனிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அந்நாட்டின் பல பகுதிகள் சிதிலம் அடைந்துள்ளன, இருப்பினும் வல்லரசு நாடான ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் அதிபர் தனது படைகளை வைத்து சமாளித்து வருகிறார்.
உக்ரைனின் அதிவேக பதில் தாக்குதல்களுக்கு மேலும் பலன் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கின. குபியான்ஸ்க் நகருக்குள் உக்ரைன் படையினர் நுழைந்துவிட்டனர். உக்ரைனில் உள்ள ரஷ்ய படையினருக்கு பொருள்களை விநியோகம் செய்வதற்கான முக்கிய மையமாக இந்த நகரம் விளங்கி வந்துள்ளது.
மேலும் அருகில் உள்ள இசியம் நகரில் இருந்து தங்கள் படையினர் பின்வாங்கியிருப்பதாகவும் திரும்ப ஒன்று சேரும் நடவடிக்கைக்காகவே இப்படிச் செய்திருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷியப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரின் அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் 440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், 440க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய புதைகுழியை உக்ரேனிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். போரில் பல வீரர்கள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் இங்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த உடல்கள் அனைத்திற்கும் தடயவியல் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்ட உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள் உடல்கள் புதைகப்பட்ட தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அதிபர் ஜெலென்ஸ்கி ஆதங்கத்துடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.