புதிய கார் வாங்குவதற்காக பிறக்கப் போகும் குழந்தையை விற்பனை செய்யப் போவதாக பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்த தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 21 வயது ஜூனிபர் பிரைசன் என்ற பெண், தனக்கு பிறக்க போகும் ஆண் குழந்தையை தத்தெடுக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என நீதிமன்ற ஆவணங்களின்படி பதிவு செய்திருந்தார்.
இது குறித்து அவர் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், குழந்தையை கொடுப்பதற்காக அதிக பணம் கொடுக்க வேண்டும் என பேரம் பேசியதாகவும் தெரிகிறது.
ஒரு சில தம்பதிகள் பணம் கேட்டவுடன் பின் வாங்கியதாக கூறப்படும் நிலையில், குழந்தையை விற்று கிடைக்கும் பணத்தில் புதிய கார் வாங்க அவர் திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் வில்லியம்சன் என்பவர் அவருடைய குழந்தையை வாங்கியதாக பேஸ்புக்கில் பகிர்ந்ததால், பலரும் பேஸ்புக் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்பு சேவை மையத்துக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், குழந்தையை விற்பனை செய்த பிரைசன் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே அதே பகுதியில் ஆயிரம் டாலருக்கு ஒரு குழந்தையை விற்று பீர் குடிக்க முயன்ற தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய கார் வாங்குவதற்காக குழந்தையை விற்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.