கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவி, கோடி கணக்கான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது, கொரோனா போலவே ரஷ்யாவில் இருந்து ஒரு புதிய வைரஸ் பரவி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் மர்ம வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிக காய்ச்சல் மற்றும் ரத்தம் கலந்த இருமல் இதன் அறிகுறிகள் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 10 நாட்கள் படுக்கையில் முடங்கி விடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த மர்ம வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதை ரஷ்ய மருத்துவத்துறை அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். புதிய நோய்க்கிருமிகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றும், மைக்ரோ பிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட பொதுவான சுவாசத் தொற்றுகள் மட்டுமே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மர்ம வைரஸ் என கூறப்படுவது உண்மையில் சுவாசக் குழாய் தொற்றாக இருக்கலாம் என்றும், அது புதிய வைரஸ் அல்ல என்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறிகுறிகள் மோசமடையும்போது அவசர சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சமூக வலைதளங்களில் இந்த மர்ம வைரஸ் ஒன்று பரவி வருவதாக கூறப்படுவது, ரஷ்ய மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.