42 வார கர்ப்பிணியான நியூசிலாந்தின் பெண்களுக்கான மத்திய அமைச்சர், குழந்தையை பெற்றெடுப்பதற்கு தானே மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.
அந்நாட்டின் பசுமைக் கட்சியை சேர்ந்த ஜூலி ஜெண்டேர், காரில் போதுமான இடம் இல்லை என்பதால் ஏற்பட்ட தூண்டுதலால் சைக்கிளில் சென்றதாக கூறுகிறார். மேலும், காலையில் தானும், தனது கணவரும் மிதிவண்டியில் பயணித்தது குறித்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் தனது முதலாவது குழந்தையை பெற்றெடுத்த நியூசிலாந்தின் பிரதமர் ஜெஸிந்தா அடேர்ன், ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும்போது குழந்தையை பெற்ற உலகின் இரண்டாவது தலைவர் என்ற பெயரை பெற்றார்.
சைக்கிள் பிரியராக அறியப்படும் 38 வயதாகும் ஜெண்டேர், அந்நாட்டின் போக்குவரத்துத்துறை துணையமைச்சராகவும் பணியாற்றுகிறார். இதுதான் எங்களுக்கு அதிர்ஷ்டம் என்று தொடங்கும் அவரது பதிவில், எங்களது காரில் பேறுகால உதவியாளருக்கான கூடுதல் இடமில்லாத காரணத்தினால், நானும் என்னுடைய கணவரும் மிதிவண்டியில் பயணித்தோம்… ஆனால், அது எனக்கு சிறந்த மனநிலையை உண்டாக்கியது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் பிறந்த ஜெண்டேர், தான் கர்ப்பமானதை, நாங்கள் மிதிவண்டியில் கூடுதல் இருக்கையை அமைக்கவுள்ளோம் என்ற பதிவின் மூலம் அறிவித்திருந்தார். மூன்று மாதங்கள் பேறுகால விடுப்பை எடுக்கவுள்ள இவர், நியூசிலாந்தில் அமைச்சராக பதவியில் இருக்கும்போதே குழந்தையை பெற்றெடுத்தோரின் பட்டியலில் இணையவுள்ளார்.