ஜப்பானின் மேற்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக குறைந்தது 27 பேர் பலியாகியுள்ளனர். டஜன் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
வியாழக்கிழமை முதல் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஹிரோஷிமா பிரதேசத்தில் பலரும் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 15 லட்சம் மக்கள் வீட்டை விட்டு வெளியேற ஆணையிட்டுள்ள நிலையில், இன்னும் 30 லட்சம் பேர் வீட்டைவிட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேடுதல் மற்றும் மீட்புதவி நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் சிப்பாய்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் நிகழ்ந்துள்ள நிலச்சரிவால் சிலர் உயிரோடு புதையுண்டுள்ளதாக ஜப்பானின் கியோடோ நியூஸ் முகவை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானின் தலைநகரான டேக்கியோவின் மேற்கில் சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மோட்டோயாமா நகரில், வெள்ளிக்கிழமை காலையில் இருந்து சனிக்கிழமை காலை வரை 583 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக ஜப்பானின் வானிலை முகவை கூறியுள்ளது.