50 அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய மதிப்பில் சுமார் 3500 ரூபாயை அங்காடி ஒன்றிலிருந்து திருடியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 36 ஆண்டுகளை சிறையில் கழித்தவரை விடுதலை செய்து அமெரிக்காவின் அலபாமா மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில் 1970களில் அமல்படுத்தப்பட்ட கடுமையான விதிமுறைகளின் கீழ் கைது செய்யப்பட்ட ஆல்வின் கென்னார்ட்டுக்கு தற்போது 58 வயதாகிறது.
ஆல்வின் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தவுடன் அங்கு கூடியிருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உணர்ச்சி மிகுந்து காணப்பட்டனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவரது வழக்கறிஞர் கார்லா க்ரவுடர், "இந்த வாய்ப்பைக் கண்டு அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆல்வின் இனி அவரது குடும்பத்தினரால் கவனிக்கப்படுவார்" என்று கூறினார்.
தான் கைதுசெய்யப்படுவதற்கு முன்பு செய்துகொண்டிருந்த தச்சர் வேலையை மீண்டும் தொடருவதற்கு ஆல்வின் விரும்புவதாக அவர் மேலும் கூறினார்.
1983 ஆம் ஆண்டு, அதாவது தனக்கு 22 வயதிருக்கும்போது, கையில் கத்தியுடன் அங்காடி ஒன்றில் கொள்ளையடித்த குற்றத்திற்காக ஆல்வினுக்கு பிணையில்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தின் போது ஆல்வின் யாரையும் தாக்கவோ அல்லது காயப்படுத்தவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.