இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரோ சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கியதும் அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்காய், இந்திய பிரதமர் மோடியை ஆரத் தழுவி வரவேற்றார். பின்னர் அந்நாட்டு ராணுவ மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் மோடிக்கு பூடானின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் வழங்கினார்.
இந்த விருதை பெறும் அயல்நாட்டை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இன்று என் வாழ்வில் முக்கியமான நாள் என்றார். பூடானின் உயரிய விருது எனக்கு வழங்கப்பட்டது என்றும் ஒவ்வொரு விருதும் சிறப்பானது என்றும் தெரிவித்தார்.
ஆனால் நீங்கள் வேறு நாட்டிலிருந்து ஒரு விருதைப் பெறும்போது, இரு நாடுகளும் சரியான பாதையில் செல்கின்றன என்பதை காட்டுகிறது என்று தெரிவித்த பிரதமர், இது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல, இந்தியா மற்றும் 140 கோடி இந்தியர்களுக்கான கவுரவம் என்று நிகழ்ச்சியுடன் கூறினார்.
இந்த பெருமையை பூட்டானில் உள்ள இந்தியர்களின் சார்பாக பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் இந்த விருதுக்காக அனைவருக்கும் நன்றி என்றும் பிரதமர் தெரிவித்தார்.