ரஷ்யாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றின் கதவு திடீரென திறந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் சைபீரிய நகரமான மேகனிலிருந்து IrAero நிறுவனத்திற்கு சொந்தமான ஏஎன்26 ட்வின் ட்ராப் சிறிய ரக விமானம் ஒன்று 26 பயணிகளுடன் பசிபிக் கடற்கரையில் உள்ள மெகாடன் பகுதி நோக்கி சென்றுக் கொண்டிருந்துள்ளது.
மைனஸ் 41 டிகிரி குளிர் கொண்ட மேகானிலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களில் விமானத்தின் பின்பக்க கதவு திடீரென திறந்து கொண்டுள்ளது. இதனால் அதிர்ச்சியில் பயணிகள் அலறியுள்ளனர். வெளிக்காற்று உள்புகுந்ததால் விமானத்திற்குள் கடுமையான குளிர் வீசியுள்ளது.
பயணிகள் அலறலை கேட்ட விமானி உடனடியாக அருகே உள்ள விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். அதனால் பயணிகள் எந்த அபாயமும் இல்லாமல் தப்பினர். மைனஸ் குளிர்நிலை காற்று உள்புகுந்த நிலையில் பயணிகள் அனைவரும் குளிர்கால உடை அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பயணி ஒருவர் எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.