மாதவிடாய் குறித்து பல நாடுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒரு நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மாதவிடாய் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்கள் மாதம்தோறும் எதிர்கொள்ளும் மாதவிடாய் பிரச்சினை இயற்கையான ஒன்று. எனினும் அதுகுறித்த புரிதல் பல பகுதிகளில் மக்களிடையே இல்லாததால் பல மோசமான விளைவுகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதுகுறித்து உலகம் முழுவதும் பெண்ணிய அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பலர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்காட்லாந்து அரசாங்கம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் உள்ளிட்ட சகல பொருட்களும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில் உள்ள பெண்கள் கழிவறை, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என நாட்டின் அனைத்து இடங்களிலும் மாதவிடாய் பொருட்கள் இலவசமாக கிடைப்பதை அமைச்சர்கள் உறுதிபடுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.