வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார் என்ற நிலையில், தற்போது புதிய அதிபருக்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் நேற்று திடீரென மாணவர்கள் பேரணி நடந்த நிலையில், அதில் அதிபர் முகமது சகாபுதீன் பதவி விலக வேண்டும் உள்பட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று இரவு திடீரென அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டதாகவும், மாணவர்களை ராணுவம் தடுத்து நிறுத்திய நிலையில், மாணவர்கள் மற்றும் ராணுவத்தினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதிபருக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தடுப்பை மீறி மாணவர்கள் முன்னேற முயற்சித்ததால், பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் மாணவர்களை தடுத்து நிறுத்த பெரும் கஷ்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் அதிபர் ஹசீனாவின் கூட்டாளி தான் தற்போதைய அதிபர் என்றும், எனவே அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வங்கதேசத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.