அசர்பைஜான் நாட்டில் நடைப்பெற்று வரும் COP29 என்ற காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டில் சத்குரு அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இதில் சத்குரு அவர்கள் பேசும் போது, நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை. எனக் கூறினார்.
அஜர்பைஜானில் பாகு நகரத்தில் நவம்பர் 11-15 வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டுள்ள சத்குரு அவர்கள் இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மண் வளம் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இந்த சுற்றுச்சூழல் மாநாட்டில் சத்குரு பேசுகையில், "நாம் சூழலியல், காலநிலை ஆகியவற்றை பற்றி பேசும்போது இது மனித உயிர், வாழ்வாதாரம் மற்றும் மனிதர்களின் வாழ்க்கை முறை பற்றியது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புவுடையவை. இந்த பூமியின் ஆரோக்கியம் என்பது மனிதர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் உயிர்போடு இருப்பதில் இருக்கிறது. நுண்ணுயிர், பூச்சி புழு மற்றும் மற்ற அனைத்து சிறிய உயிர்களும் வலிமையாக வாழவில்லை என்றால் நாம் வலிமையாக வாழ முடியாது.
நீண்ட காலமாக நிலம் பசுமை போர்வையின்றி தரிசாக விடப்படுவதால் அதிகமான உயிரினங்கள், குறிப்பாக நுண்ணுயிர்கள் அழிந்து போகின்றன. இந்த போக்கு பூமியை அழித்துவிடும். உயிரினங்கள் என்று சொன்னால் நாம் பாண்டா, புலி மற்றும் டைனோசர்கள் பற்றி நினைக்கிறோம். ஆனால் அப்படி இல்லை நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை." எனத் தெரிவித்தார்.
அழிந்து வரும் மண் வலம் குறித்து சத்குரு பேசுகையில் "மண் அழிவு என்பது மிக தீவிரமான பிரச்சனை. ஆனால் இதை பற்றி யாரும் பேசுவதில்லை, கடந்த இரண்டு COP மாநாடுகளில் இதனை நாம் வலியுறுத்தி வருகிறோம்.பூமியில் உள்ள உயிரினங்களில் 60% மேலாக மண்ணுக்கு அடியில் உள்ளன. மேலும் 95% சதவிகித உயிர்கள் மண் மேல் செழித்து வளர்கின்றன. தற்போது இந்த மாநாட்டில் நாம் பசுமையான உலகத்தைப் பற்றி பேசுகிறோம். மண்ணில் விழும் ஒவ்வொரு கூடுதல் இலையும் காலநிலை தணிப்புக்கான ஒரு சிறிய படியாகும். மேலும் விவசாய நிலங்கள் ஒன்று மரங்கள், புதர்கள், மூடுப் பயிர்கள் என ஏதோவொரு வகையில் பசுமை போர்வையின் கீழ் வர வேண்டும்.
நாம் தொடர்ந்து படிம எரிபொருள் பற்றி பேசுகிறோம். அது நடந்தாக வேண்டும். அந்த மாற்றம் தேவை தான். ஆனால் குறிப்பிடத்தகுந்த தொழில்நுட்ப புதுமை இல்லாமல் இது நிகழப் போவதில்லை. நீங்கள் விரும்புவதால் மட்டுமே இது நடந்துவிடாது. நானும் நீங்களும் கச்சா எண்ணெய் நல்லதல்ல என்று சொல்வதால் மட்டுமே இந்த உலகம் எண்ணெய் பயன்பாட்டை கை விட்டுவிடாது. சரியான மாற்று வழிகள் உருவாக வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற COP-28 மாநாட்டில் மண் வளம் காப்பதன் அவசியம் குறித்து சத்குரு அவர்கள் பேசினார். அதன் பிறகே முதல்முறையாக காலநிலை தொடர்பான சர்வதேச மாநாட்டில் காலநிலை மாற்ற பிரச்சனைகளுக்கு மண் வளம் மேம்படுத்துவதன் மூலம் தீர்வினை கொண்டு வர முடியும் என்ற உரையாடல்கள் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
அழிந்து வரும் மண் வளத்தினை மேம்படுத்துவதற்காக மண் காப்போம் என்ற உலகளாவிய இயக்கத்தை சத்குரு அவர்கள் 2022-ஆம் ஆண்டு துவக்கினார். உலகளவில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல்வேறு நாட்டு அரசாங்கங்களை செயல்பட வலியுறுத்தியும் 30,000 கி.மீ பயணம் மேற்கொண்டார். இவ்வியக்கத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு அந்தந்த நாடுகளின் மண் வளத்தை மேம்படுத்துவதற்கான பிரத்யேக பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
விவசாய மண்ணை மீட்டுருவாக்குவதற்காக UNFCCC-யிடம் இவ்யியக்கம் வழங்கியிருக்கும் சமீபத்திய பரிந்துரையை 69 முக்கிய உலகளாவிய அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளது. இது இவ்வியக்கத்தின் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.