காசாவில் நடந்து வரும் போரை மையப்படுத்தி திரையிடப்பட்ட தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப் என்ற ஆவணப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் தங்க சிங்க விருதை வென்றுள்ளது.
வெனிஸில் 82வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடந்து வரும் நிலையில், இதில் ஆவணப்பட பிரிவில் தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப் என்ற படம் திரையிடப்பட்டது. பிரெஞ்சு இயக்குனர் கவுதர் பென் ஹனியாவால் இயக்கப்பட்ட இந்த படம் ஹிந்த் ரஜப் என்ற 5 வயது பாலஸ்தீன சிறுமியின் இறுதி தருணங்களை ஆவணப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து ஹிந்த் ரஜப்பும், குடும்பத்தினரும் காரில் தப்பிச் சென்றபோது இஸ்ரேலியர்கள் அந்த கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில், உயிர் பிழைத்த ஹிந்த், தனது கடைசி தருணத்தில் மீட்பு அமைப்பான செஞ்சிலுவை சங்கத்தை போனில் அழைத்து உதவி கேட்டாள்.
ஆனால் சிறுமிக்கு உதவ வந்த 2 ஆம்புலன்ஸ் ஊழியர்களையும், சிறுமியையும் இஸ்ரேல் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த ஆவணப்படத்தில் சிறுமி கடைசியாக உதவிக் கேட்டு பேசும் ஆடியோ வெளியானபோது ஆவணப்படத்தை பார்த்தவர்கள் மனம் கலங்கினர். இந்த ஆவணப்படத்திற்கு தங்க சிங்கம் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை பெற்ற இயக்குனர் பென் ஹனியா பேசியபோது “இது ஒரு சிறுமியின் கதை மட்டுமல்ல. ஒரு தேசத்தின் கதை. இந்த படத்தால் ஹிந்தை மீண்டும் கொண்டு வர முடியாது. ஆனால் அவளது குரலை, கதையை உலகத்திற்கு கொண்டு செல்ல முடியும்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K