இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் மூண்டுள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பிற்கு அமெரிக்கா உதவி செய்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்ரேலுக்கும் கடந்த பல ஆண்டு காலமாக மோதல் இருந்து வரும் நிலையில் நேற்று ஹமாஸ் அமைப்பினர் திடீரென 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து இஸ்ரேலும் போரை அறிவித்ததுடன் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்பு பகுதியான காசா பகுதியிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு அளிப்பதாக ஈரான் மற்றும் அரபு நாடுகள் தெரிவித்துள்ளது. முன்னதாக கைதிகளை பரிமாற்றிக் கொள்ளும் ஒப்பந்தத்தில் ஈரானுக்கு அமெரிக்க அரசு 6 பில்லியன் டாலர்களை வழங்கியது. அந்த பணம்தான் தற்போது ஹமாஸ் கிளர்ச்சியாளர்களின் போருக்கு உதவியுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் வெட்கக்கேடானது. முழு பலத்துடன் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது. துரதிஷ்டவசமாக ஜோ பைடன் அரசால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் ஹமாஸ் அமைப்பிற்கு மறைமுகமாக சென்று சேர்கிறது. ஈரானுக்கு அமெரிக்கா கொடுத்த பணம் ஹமாஸ் அமைப்பிற்கு சென்றிருக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.