நீண்ட வருடமாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்த பிரெக்ஸிட் தீர்மானம் நிறைவேறியதை தொடர்ந்து இன்று ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுகிறது இங்கிலாந்து.
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ தீர்மானத்தை 2016ல் கொண்டு வந்தது இங்கிலாந்து. தொடர்ந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முயன்று டேவிட் கேமரூன், தெரசா மே உள்ளிட்ட இரண்டு பிரதமர்கள் பதவி விலகினர். இந்நிலையில் புதிதாக பதவியேற்ற போரிஸ் ஜான்சனுக்கு இந்த பிரச்சினை தொடர்ந்தது.
பிரெக்ஸிட்டை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றத்தை கலைத்து மீண்டும் தேர்தலை அறிவித்தார். தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்த போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராக பதவியேற்று பிரெக்ஸிட்டை நிறைவேற்றியுள்ளார். பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறுகிறது இங்கிலாந்து.
இதற்கு பிறகு இங்கிலாந்து செல்ல ஐரோப்பிய யூனியனின் பாஸ்போர்ட் செல்லுபடியாகாது. ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு முன்பு இங்கிலாந்து பயன்படுத்திய நீல நிற பாஸ்போர்ட்டு மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது.