சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக்கை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள டுவிட்டருக்கு உலகம் முழுவதும் பில்லியன் கணக்கில் பயனாளிகள் உள்ளனர். டுவிட்டரை வைத்தே முழு நேர தொழில் செய்து வருமானம் பெற்று வரும் பயனாளிகள் பலர் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென ஒரு மணி நேரம் டுவிட்டர் சேவை முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்தியா உள்ளிட்ட ஒருசில ஆசிய நாடுகளிலும் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நேற்று டுவிட்டர் சேவை திடீரென முடங்கியது. நேற்றிரவு சுமார் எட்டு மணியளவில் டுவிட்டர் பயனாளிகளின் பக்கத்தில் முடங்கிய தகவலை பார்த்ததும் பலர் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுடைய செய்தி பதிவாகவில்லை என்பது மட்டுமின்றி எந்த டுவீட்டையும் அவர்களால் பார்க்க முடியவில்லை. ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது மீண்டும் முயற்சிக்கவும் என்ற வாசகம் மட்டுமே காண முடிந்தது. இதனையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த டுவிட்டர் நிர்வாகம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதை அடுத்து ஒருமணி நேரத்திற்குப் பின் மீண்டும் டுவிட்டர் செயல்பட தொடங்கியது
ஆண்டிராய்ட் செல்போன், ஆப்பிள் செல்போன் உள்ளிட்ட அனைத்து போன்களிலும் டுவிட்டர் செயலி முடங்கிவிட்டது. இதற்கான காரணம் என்ன? என்று டுவிட்டர் நிறுவனம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்றாலும் தொழில்நுட்ப காரணமாகவே சேவை பாதிக்கப்பட்டதாகவும், எந்தவித ஹேக்கிங் முயற்சியும் இல்லை என்றும் டுவிட்டர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன