அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பை தொடர்ந்து சீனா - அமெரிக்கா இடையே எழுந்த வர்த்தக போரில் தற்போது பேச்சுவார்த்தை எட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்த நிலையில், சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தியது. அதை தொடர்ந்து அமெரிக்காவும், சீனாவும் ஒருவருக்கொருவர் வரி விகிதத்தை அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில் அது இரு நாடுகள் இடையேயான வர்த்தக போராக மாறியது.
இதனால் சீன பொருட்களின் விலை அமெரிக்காவில் பெரும் உயர்வை கண்டதால் மக்கள் திண்டாட்டத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில் இரு நாடுகள் இடையேயான பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசண்ட் உள்ளிட்டோர் அடங்கிய அமெரிக்க குழுவுக்கும், சீன துணை பிரதமர் ஹீ லைஃபெங்க் தலைமையிலான குழுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக நிலை எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீன எலக்ட்ரானிக் பொருட்களுக்கான தேவை அமெரிக்காவில் அதிகமாக உள்ளதால் அதை குறைந்த வரியில் அனுமதிக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அதற்கு ஈடாக சீனா தனது பொருளாதார சந்தையின் கதவுகளை அமெரிக்காவிற்கு திறக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “சீனாவும், அமெரிக்காவும் பயனடைவதையும், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவின் சந்தை திறந்திருப்பதையும் காண விரும்புகிறோம். பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் தற்சார்பு பொருளாதாரக் கொள்கை உள்ள நிலையில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகை சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் பலனடைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
Edit by Prasanth.K