கொரோனா பரவல் குறையாத நிலையில் ஊரடங்கை தளர்த்தினால் பெரும் ஆபத்து ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 14 அன்று ஊரடங்கு முடிய உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் பல உலக நாடுகளும் ஊரடங்கை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ”கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் ஊரடங்கை தளர்த்துவது ஆபத்தை ஏற்படுத்தும். ஊரடங்கை தளர்த்தும் முன்னர் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது குறைய வேண்டும். போதிய மருந்து பொருட்கள் கையிருப்பில் இருக்க வேண்டும். முக்கியமாக ஊரடங்கு விலக்கப்பட்டாலும் கூட மக்கள் தொடர்ந்து சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.