ஸ்பெயினில் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயினுக்கு சென்றார். இவருடன் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு தொழில் தொடங்க வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது,
இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஸ்பெயினில் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலையும் மேற்கொண்டதாகவும், இது ஸ்பெயின் நாட்டின் வெற்றிகரமான பயணத்தின் இறுதிக்கட்டம் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன் என்று முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.