அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு உலகளாவிய பங்குசந்தை வணிகத்தில் பெரும் ஆட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு நாடும் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கும் வரிகளை பரஸ்பரம் அந்த நாட்டு பொருட்களுக்கும் அமெரிக்காவில் விதிப்பது என்று ட்ரம்ப் கொண்டு வந்த புதிய வரி முறை உலக நாடுகளை மட்டுமல்லாது, அமெரிக்க மக்களையும் ஆட்டம் காண செய்துள்ளது.
இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் கூடுதல் வரி, சீனப்பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமிற்கு 46 சதவீத கூடுதல் வரி, மனிதர்களே வாழாத தீவுகளுக்கு கூட 10 சதவீதம் வரி. இப்படி ஒரு பட்டியலையே ட்ரம்ப் வெளியிட்ட நிலையில் உலக பங்கு சந்தை கடும் ஆட்டம் கண்டு வருகிறது. பல நாடுகளிலும் பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில் 1987ல் நிகழ்ந்த மிகப்பெரும் பங்குசந்தை சுணக்கம் தற்போதும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
ஆனால் அதிபர் ட்ரம்ப்போ வரியை அறிவித்துவிட்டு எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக ஃப்ளோரிடாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டார். சுற்றுலா முடிந்து திரும்பிய அவர் இதுகுறித்து பேசியபோது “சில நேரங்கள் எதையாவது சரிசெய்ய மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது இருக்கும்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த பரஸ்பர வரிவிதிப்பால் கடுப்பான சீனா, அமெரிக்க தனக்கு விதித்த 34 சதவீதம் கூடுதல் வரியையே அமெரிக்காவிற்கும் விதித்துள்ளது. இந்த வர்த்தக போரால் அமெரிக்காவில் பிறநாட்டு பொருட்களில் விலை கணிசமாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் அமெரிக்க மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள குவியத் தொடங்கியுள்ளனர்.
Edit by Prasanth.K