கருணாநிதியை சந்தித்த மோடி - அரசியல் பின்னணி என்ன?
, செவ்வாய், 7 நவம்பர் 2017 (09:30 IST)
பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை நேற்று சந்தித்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
தினந்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்ள மோடி தமிழகம் வருவது உறுதியானவுடன் இங்கு அவர் என்னென்ன நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்கிற பட்டியல் கொடுக்கப்பட்டது. அதில், மோடி ஒன்றை புதிதாக சேர்த்தார். அது ‘கலைஞரை நான் சந்திக்க வேண்டும்’.
அதுகேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி ஆனாலும், அதற்கான ஏற்பாடுகள் மளமளவென நடந்தன. இதுபற்றி உடனடியாக மு.க.ஸ்டலினுக்கு அதிகாரிகள் தகவல் கூறினார்கள். அவரும் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்.
பவளவிழாவை முடித்து விட்டு நேராக கோபாலபுரம் சென்றார் மோடி. அவரை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார் மு.க.ஸ்டாலின். அங்கே அமர்ந்திர்ந்த கருணாநிதியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, நீங்கள் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வந்து ஓய்வெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் மோடி. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளையும் சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் 15 நிமிடம் அங்கிருந்த மோடி அதன் பின் கிளம்பி சென்றார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. ஒரு மூத்த அரசியல் தலைவரை, அதுவும் உடல் நலம் குன்றியுள்ள ஒருவரை பிரதமர் சந்தித்ததை வரவேற்க வேண்டும். இதில் அரசியல் நோக்கம் ஒன்றுமில்லை என திமுகவினரும், பாஜகவினரும் கூறி வந்தாலும், இதில் முழுக்கவே அரசியல் இல்லை என ஒதுக்கிவிட முடியாது.
இதற்கு முன் பலமுறை சென்னை வந்துள்ளார் மோடி. ஆனால், அவர் கருணாநிதியை சந்திக்கவில்லை. கடந்த மூன்றரை வருடங்களாக மோடியை சந்திக்க அனுமதி கேட்டு வருகிறார் ஸ்டாலின். ஆனால் அனுமதியில்லை. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட மோடி வந்து அவரை பார்க்கவில்லை. ஜெ.வை பார்க்க முடியாத சூழ்நிலை என்கிறார்கள் பாஜகவினர். ஒரு பிரதமர் நினைத்தால் அது முடியாதா என்ன?. அவரை தாண்டிய அரசியல் சக்தியோ அதிகாரமோ இருக்கிறதா என்ன?
பணமதிப்பிழப்பு, நீட் தேர்வு, மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஜி.எஸ்.டி என பாஜகவின் அனைத்து திட்டங்களையும் திமுக கடுமையாக எதிர்த்தது. எதிர்த்து வருகிறது. மேலும், கொள்கை ரீதியாகவும் திமுகவும், பாஜகவும் வெவ்வேறு திசையில் பயணிக்கும் இரு கட்சிகள்.
இந்நிலையில்தான் கருணாநிதியை சந்தித்துள்ளார் மோடி. இது கண்டிப்பாக ஆச்சர்யமாகவும், அரசியலாகவும் பார்க்கப்படுவதை தவிர்க்க முடியாது. முக்கியமாக, திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்புகிறதா? என்கிற விவாதம் தற்போது எழுந்துள்ளது. திராவிடக் கட்சிகள் தமிழகத்தை பாழ்படுத்திவிட்டன. எனவே, கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என சூளுரைத்த பாஜகவினர் தற்போது மௌனம் காக்கிறார்கள். கூட்டணி பற்றி அந்த நேரத்தில்தான் கூறமுடியும் என கூறத் தொடங்கியுள்ளனர்.
ஜெ.விற்கு பின் அதிமுக மீது மக்களுக்கு இருந்த அபிப்ராயம் தற்போது மாறிவிட்டது. சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் ஆகியோரின் செயல்பாடுகள் காரணமாக அதிமுகவின் மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். இனிமேல், இரட்டை இலைக்கு விழும் ஓட்டுகள் நிச்சயம் குறையும்.
அதிமுகவின் முதுகில் சவாரி செய்து தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கும் மோடிக்கு இது தெரியாதா என்ன? மக்கள் மனதில் உள்ள கோபங்களும், அதிருப்திகளும் நிச்சயம் உளவுத்துறை வழியாக பிரதமர் இல்லத்திற்கு சொல்லப்பட்டிருக்கும். எனவே, எதற்கும் திமுகவையும் கையில் பிடித்து வைத்திருப்போம் என மோடி நினைத்திருக்கலாம். அதன் விளைவாகவே, அவர் கருணாநிதியை சந்தித்திருக்கலாம். இது எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கலாம். அதுவும் 2ஜி அலைக்கற்று வழக்கில் தீர்ப்பு நெருங்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கட்து.
மோடியின் செயல் உள்ளூர் பாஜகவினரையும், திமுகவினரையும் ஏன் மற்ற கட்சியினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இனி, திமுகவை கடுமையாக விமர்சிக்கலாமா என பாஜகவினர் யோசிப்பார்கள். மேலும், திமுக தலைமையில், பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைக்க காத்திருக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் திட்டத்தை ஆட்டம் காண செய்திருக்கிறார் மோடி. தனது சாதுர்யமான நடவடிக்கையால் தமிழக அரசியல் கட்சிகளுக்கு இடையே குழப்பத்தி ஏற்படுத்தி விட்டு சென்றுவிட்டார் மோடி.
அரசியல் சதுரங்க விளையாட்டை கவனமாக ஆடும் மோடி தற்போது தனது காயை வேறு பக்கம் திருப்பியிருக்கிறார். இதனால் தமிழக அரசியலில் சில மாற்றங்கள் ஏற்படலாம். தேர்தல் நேரத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.
பரபரப்பான திருப்பங்களுக்காக காத்திருக்கிறது தமிழக அரசியல்....
அடுத்த கட்டுரையில்