Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“டயர் சைஸ் கூட இல்லை, உனக்கு பஸ் வேணுமான்னு கேப்பாங்க” - பேருந்து ஓட்டுநராக துடிக்கும் ஷர்மிளாவின் கதை

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (14:13 IST)
கோவையைச் சேர்ந்த 24 வயதான ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகளான ஷர்மிளா பார்மசியில் டிப்ளமோ முடித்துள்ளார்.

தற்போது முழு நேரமாக ஆட்டோ ஓட்டி வரும் ஷர்மிளா, கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாக கொண்டுள்ளார். பேருந்து ஓட்டுவதற்கான பயிற்சி பெற்று அதற்கான உரிமமும் பெற்றுள்ளார்.

ஆண்கள் மட்டுமே அதிகம் கோலோச்சும் கனரக வாகனங்களில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என்கிறார் ஷர்மிளா.

இனி அவருடைய சொற்களில்...

“நான் தற்போது பயணிகள் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகிறேன். என் அப்பா சிலிண்டர் ஆட்டோ ஓட்டி வருகிறார். வாடகை இல்லாத நாட்களில் அவருடன் சிலிண்டர் ஆட்டோ ஓட்டச் செல்வேன்.

டிரைவர் என்றாலே சமூகத்தில் பலரும் முகச் சுழிப்புடன் தான் பார்ப்பார்கள். என் அப்பா டிரைவர்தான். அதனால் எல்லாரையும் படிக்க வைக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார். ஆனால் எனக்கு எந்த வேலையை எல்லோரும் குறைவாக பார்த்தார்களோ அதன் மீதுதான் ஆர்வம் அதிகரித்தது. நான் ஏழாவது வகுப்பு படிக்கும்போதிலிருந்தே எனக்கு டிரைவிங் மீது ஆர்வம் வந்துவிட்டது. அப்போதே அப்பாவின் ஆட்டோவை எடுத்து ஓட்டுவதற்கு பழகினேன். அப்படிதான் எனக்கு இதன் மீது ஈடுபாடு வந்தது.

வேலை என வந்தபோது உனக்கு எதில் விருப்பமோ அதை செய் என வீட்டில் கூறிவிட்டார்கள். அப்போது தான் ’எனக்கு டிரைவிங்ல ஆசை இருக்கு, டிரைவர்னாலே ரொம்ப Cheap ஆக பார்க்குறாங்க, எனக்கு அந்த பார்வை மேல நம்பிக்கையே இல்லைனு’ கூறி டிரைவிங்கை என்னுடைய துறையாக தேர்வு செய்தேன். அப்பா முதலில் தயங்கினார். நாளை உன்னையும் Cheap ஆக பார்க்க மாட்டார்களா என அப்பா கேட்டப்ப தான், அந்த எண்ணத்தை மாத்ததான் என்னுடைய முடிவுனு சொன்னதும் புரிந்து கொண்டு உறுதுணையாக இருந்தார்கள்.

தொடக்கத்தில் அப்பா உடன் ஆட்டோ ஓட்டுவதற்குச் சென்று பழகி கொண்டேன். என் குடும்பம், நண்பர்கள் என அனைவருமே பக்கபலமாக இருந்தார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன்.

பெண்கள் பல ஊர்களில் பேருந்து ஓட்டியுள்ளார்கள். ஆனால் கோவையில் விசாரித்த வரை அப்படி யாரும் இல்லை. உனக்கு டிரைவிங்கில் சாதிக்க வேண்டுமென்றால் பேருந்து ஓட்டுவதற்கு ஆரம்பி என முதன்முதலில் அப்பா தான் எனக்கு அந்த ஆர்வத்தை விதைத்தார். நான் கனரக வாகன உரிமம் பெறுவதற்கும் அப்பா தான் முழு காரணம்.

‘நீ சாதிக்கனும்னு முடிவு பண்ணிட்டனா சாதிச்சிரு, கோயம்புத்தூர்ல என் பொண்ணு தான் முதல் பெண் பஸ் டிரைவர்னு நான் பெருமையா சொல்லிக்குவேன். ஆயிரம் பேர் ஆயிரம் விதமா பேசுறத அதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்னு’ என் அப்பா ரொம்ப பக்கபலமா இருந்தாங்க.

நான் சின்ன வயதிலிருந்து இருந்து பேருந்தில் பயணம் செய்தது குறைவு. எந்த இடத்துக்கு போனாலும் ஆட்டோவிலே அப்பா அழைத்துச் சென்று வந்துவிடுவார். சின்ன வயதில் பேருந்து என்பது அந்நியமாக இருந்ததும் அதன் மீது ஈர்ப்பு வர ஒரு முக்கிய காரணம். அதோடு அப்பாவின் உந்துதலும் தான் ஆட்டோவிலிருந்து பேருந்து பக்கம் என்னைத் திரும்ப வைத்தது. ‘இந்த காக்கி சட்டையை போட்டதுக்குப் பிறகு முடியாததுனு எதுவுமே இல்லைனு, அப்பா சொன்ன ஒரு வரியை எப்பவுமே நினைத்துக் கொள்வேன்.

அதன் பிறகு பேருந்து பயிற்சிக்கு சென்றேன். அப்பா வேலைக்குச் செல்வதால் ஓட்டுநர் பயிற்சிக்கு செல்லும்போதெல்லாம் அம்மா தான் என்னுடன் அனைத்து இடங்களுக்கும் வருவார். டிரைவிங் மீது இருந்த ஈடுபாட்டால் பேருந்து எளிதாக பழகிக் கொள்ள முடிந்தது.

பயிற்சி எல்லாம் முடித்து நான்கு மாதங்களுக்கு முன்பு பேருந்து உரிமம் பெற்றுவிட்டேன். பேருந்து பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்தபோது நகைப்புடன் ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாக பார்க்கிறார்கள். என் அப்பா நான் எந்த துறையாக இருந்தாலும் அவரை விட ஒரு படி மேலே இருக்க வேண்டும் என விரும்பினார். நான் கனரக உரிமம் வாங்கியதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம். தற்போது என்னால் பயணியர் பேருந்துகளை இயக்க முடியும்.

உரிமம் பெற்ற உடன் பேருந்து இயக்க அனுமதி வேண்டும் என நான் கேட்கச் சென்றேன். அப்போது அந்த செய்தி பரவலாக வந்திருந்தது. ஆனால் பேருந்து இயக்குவதற்கான அனுமதி கிடைக்க தாமதமாகும் என்றார்கள். பேருந்து இயக்க அனுமதி கேட்டுச் சென்றால் திறமையை வைத்து அல்லாமல் உயரத்தை வைத்து மதிப்பிடுகிறார்கள். ’எலிக்குட்டி மாதிரி இருக்க நீ பஸ்ஸெல்லாம் ஓட்டிருவியா, டயர் சைஸ் தான் இருக்க உனக்கு பஸ் வேணுமா’ என்று கூட என்னிடம் கேட்டிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால்தான் எவராலும் அடுத்த நிலைக்கு வர வேண்டும்.

அதனால் தற்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டே பேருந்து இயக்கும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என் ஆசையெல்லாம் பேருந்தில் என் அம்மா அப்பாவை ஏற்றிக் கொண்டு கெத்தாக வந்து நிற்க வேண்டும். எங்கள் ஊரான கோவையில் முதல் பெண் பேருந்து டிரைவராக ஆக வேண்டும் என்பது என் குறிக்கோள்.

தமிழ்நாட்டில் பெண் கனரக வாகன ஓட்டுநர்கள் உள்ளார்கள். கேரளாவிலும் கூட இருக்கிறார்கள். ஆனால் கோவையில் பேருந்து ஓட்டும் பெண் யாரும் இல்லை. அந்த பெருமை எனக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் என் குடும்பத்தில் ஆசை. முதல் கட்ட முயற்சியில் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை, அது மட்டுமில்லாமல் இழிவுபடுத்தும் விதமாகவும் பேசுகிறார்கள். அதனால் அடுத்து எந்த வாய்ப்பையும் தேடி செல்லவில்லை. அதே சமயம் பயிற்சி பள்ளி வாகனத்தின் மூலம் தொடர்ந்து பயிற்சியும் மேற்கொண்டு வருகிறேன்.

எனக்கு வெளியூர், தொலைதூர பேருந்துகளை ஓட்டுவதற்கு ஆசை இல்லை. நான் தினமும் வந்து செல்கிற காந்திபுரம் - மருதமலை வழித்தடத்தில் உள்ள பேருந்து தான் வேண்டும். அது தான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்” என்று கூறி முடித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47வது அதிபராகும் வாய்ப்பு உள்ளது: டிரம்ப்

இன்று பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

லெபனான் பேஜர் தாக்குதலுக்கு உத்தரவிட்டது நான்தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!

கழுத்தை நெரித்து உயிருடன் புதைத்த கூலிப்படை! உயிருடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!

2600 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கின்னஸ் சாதனை பெண்ணுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments