Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 24 May 2025
webdunia

மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்ற 17 வயது சிறுவன் கைது

Advertiesment
17 year old boy arrested
, திங்கள், 25 அக்டோபர் 2021 (09:22 IST)
திருமணமான இரண்டே மாதங்களில் தனது மனைவியை ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ஒடிசாவைச் சேர்ந்த கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ராஜஸ்தானில் உள்ள ஒரு நபருக்கு விற்பனை செய்யப்பட்ட பெண்ணை (மனைவியை) ஒடிசா மாநில காவல்துறையினர் கடந்த வியாழனன்று மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்.
 
பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் தமது மனைவியை விற்பனை செய்ததாக 17 வயது சிறுவனை கைது செய்துள்ள ஒடிசா மாநில காவல்துறையினர், அந்தச் சிறுவனை சிறுவர் சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்பி உள்ளனர்.
 
ஒடிசா மாநிலத்தில் உள்ள பலாங்கிர் மாவட்டத்திலிருக்கும் டிக்ராபதா கிராமத்தைச் சேர்ந்த பார்தி ரணா எனும் பெண், தமது கணவரால் தாம் விற்பனை செய்யப்பட்ட பின்பு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். பிபிசி அவரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசியது.
 
"திருமணமாகி எட்டு நாட்களுக்கு பிறகு அவர் ராஜஸ்தானில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை இருப்பதாகக் கூறி என்னை அழைத்துச் சென்றார். சுமார் இரண்டு மாத காலத்துக்கு பிறகு என்னை ஓரிடத்தில் விட்டுவிட்டு என் கணவர் எங்கோ சென்றுவிட்டார். சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு அவர் என்னை விற்பனை செய்துவிட்டார் என்பது பின்னர்தான் தெரிந்தது. என்னை காசு கொடுத்து வாங்கியவர்கள் அவர்களது வீட்டிலும் வயலிலும் வேலை செய்யுமாறு என்னைக் கட்டாயப்படுத்தினர். அங்கு வந்த காவல்துறையினர் என்னை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்," என்று தெரிவித்துள்ளார் பார்தி.

17 year old boy arrested
தம்மை விலைகொடுத்து வாங்கியவர்கள் பாலியல் ரீதியாகத் தமக்கு எந்தத் துன்பத்தையும் விளைவிக்கவில்லை என்றும் பார்தி தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பேல்பாரா காவல் நிலையத்தின் பொறுப்பு அலுவலர் பூலு முண்டா, அந்தப் பெண்ணை விலை கொடுத்து வாங்கிய நடுத்தர வயது நபர் அடுத்த சில நாட்களில் பார்தியைத் திருமணம் செய்துகொள்ள இருந்தார் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"ராஜஸ்தான் சென்ற எங்களது குழு உள்ளூர் காவல் அதிகாரிகளின் உதவியுடன் பெண்ணை மீட்டது. ஆனால் ஒரு லட்சத்து எண்பது ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்தப் பெண் வாங்கப்பட்டு உள்ளார் என்று கூறி அந்த கிராமத்தினர் எங்களை செல்ல விடாமல் தடுத்தனர். ராஜஸ்தான் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்தப் பெண்ணை எங்களால் அழைத்து வர முடிந்தது. அன்றைக்கே நாங்கள் ஒடிசா வந்து சேர்ந்து விட்டோம்," என முண்டா பிபிசியிடம் தெரிவித்தார்.
 
பிபிசியிடம் பேசிய பலாங்கிர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிதின் குஷால்கர் அந்தப்பெண்ணை ராஜஸ்தானில் கண்டுபிடிப்பது ஒடிசா காவல்துறையினருக்கு மிகவும் சவாலானதாக இருந்தது என்று கூறினார்.
 
"அந்தப் பெண்ணிடம் அலைபேசியும் இல்லை. அவரது குடும்பத்தினரிடம் இருந்து ஒரு புகைப்படத்தை மட்டும் வாங்கிக்கொண்டு ராஜஸ்தானின் பாராங் மாவட்ட காவல் துறையினரின் உதவியுடன் அந்தப் பெண்ணை நாங்கள் கண்டுபிடித்தோம். விலை கொடுத்து வாங்கிய நபர் மீது ராஜஸ்தான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்," என்றும் அவர் தெரிவித்தார்.
 
தமது மனைவி தம்மை விட்டு விட்டு எங்கோ சென்றுவிட்டார் என முதலில் காவல்துறையிடம் கூறிய அந்த சிறுவன், காவல் துறை தீவிரமாக விசாரித்த பின்னர் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார் என அந்த காவல் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

17 year old boy arrested
அந்த சிறுவனின் வயது தொடர்பாகவும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அவருக்கு வயது 24 என பார்தி பிபிசியிடம் தெரிவித்தார்.
 
ஆனால் கைது செய்யப்பட்ட நபரின் தரப்பு வழக்கறிஞர் அவருக்கு வயது 17 மட்டுமே என்கிறார். பள்ளி சான்றிதழ்கள் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த காவல்துறையினர் கணவரின் வயது 17 என்பதை உறுதி செய்துள்ளனர்.
 
இதன் காரணமாகத்தான் கணவர் சிறுவர்களுக்கான சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் பிரித்திவிராஜ் சிங் தெரிவித்துள்ளார். சென்ற வாரம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட சிறுவன் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுது அவரது பிணை மனுவை நிராகரித்த நீதிபதி சிறுவர் சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 
மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இன்னொரு பிணை மனு தாக்கல் செய்யப்படும் என்று சிறுவன் தரப்பு தெரிவிக்கிறது.
 
கைதான கணவர் இன்னும் சட்டப்பூர்வ வயதை அடையாத சிறுவன் என்பதால் அவருக்கான தண்டனை குறையக் கூடும். ஆனால் சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக அவரது பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை பாயும்.
 
கைதுக்கு பயந்து கொண்டு அவரது பெற்றோர் தற்போது தலைமறைவாக உள்ளனர். காவல்துறையினரின் பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகும் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
 
"வறுமை மற்றும் விழிப்புணர்வு இன்மையே இவ்வாறு பெண்கள் விற்பனை செய்யப்படுவதற்கு முக்கியக் காரணம்," என ஒடிசாவில் நன்கு அறியப்பட்ட செயல்பாட்டாளர் அனுராதா மஹந்தி தெரிவிக்கிறார்.
 
நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கப்படும் என்ற ஆசை வார்த்தையால், சிறுமிகள் விற்கப்படுகிறார்கள். வறுமை காரணமாக தங்களது மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத பெற்றோர், வாங்குவோரின் உண்மையான நோக்கத்தை அறிந்து கொள்ள முடிவதில்லை.
 
பெற்றோரின் நம்பிக்கையைப் பெற சில நேரங்களில் போலியான திருமணங்கள் கூட நடத்தப்படுகிறது. நல்ல வேலை வாங்கித் தருவதாகவும் பொய் சொல்லி கடத்தல்காரர்கள் சிறுமிகளை பணம் கொடுத்து வாங்கி செல்கின்றனர், என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் மெகா தடுப்பூசி முகாம்!