Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

300 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளித்த கப்பல் மீட்பு

300 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளித்த கப்பல் மீட்பு
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (12:50 IST)
300 அகதிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று மூழ்கும் தறுவாயில் இருந்த நிலையில், அந்த கப்பலில் பயணித்த அகதிகளை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.


இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா இதனை பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில், தாம் பயணிக்கும் கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக, அந்த கப்பலிலிருந்து தமது கடற்படையின் மீட்பு நிலையத்திற்கு நேற்றைய தினம் தகவலொன்று கிடைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதையடுத்து, இலங்கை அதிகாரிகள் வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடற்படையின் மீட்பு நிலையங்களுக்கு தகவலை பரிமாறியுள்ளனர். இந்த நிலையில், 300 அகதிகளுடன் பயணித்த கப்பலில் இருந்தவர்களை தமது முயற்சியில் மீட்க முடிந்தாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கை கடற்படைக்கு அறிவித்துள்ளனர்.

சிங்கப்பூரை அண்மித்த கடலில் பயணித்த மற்றுமொரு கப்பலின் உதவியுடன், இந்த அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கைக்கு அறிவித்துள்ளனர். இந்த கப்பலில் இலங்கையர்கள் பயணிப்பதாக நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் குரல் பதிவொன்று பகிரப்பட்டு வந்தது.

கப்பலில் பயணிக்கும் ஒருவர், தம்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கும் குரல் பதிவொன்றை இவ்வாறு பகிரப்பட்டது. ''பிலிப்பைன்ஸ் கடலில் 317 அகதிகளுடன் பயணித்த கப்பலொன்று மூழ்கும் அபாயத்தில் உள்ளது. குழந்தை பிள்ளைகள் இருக்கின்றார்கள். பெண்கள் இருக்கின்றார்கள். வயதானவர்கள் இருக்கின்றார்கள்.

அகதிகளுடன் வந்த கப்பலொன்று மூழ்க போகின்றது என செய்திகளுக்கு அறிவியுங்கள். 317 பேரின் உயிர்களை காப்பாற்றி விடுங்கள். கப்பல் மூழ்குகின்றது. நாங்கள் பிலிப்பைன்ஸிற்கும், வியட்நாமிற்கும் இடையில் நிற்கின்றோம்" என கப்பலில் பயணித்த அகதியொருவர் தொலைபேசியூடாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த கப்பலில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என, பிபிசி தமிழ், கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வாவிடம் வினவியது. அகதிகள் இருப்பதாகவே தமக்கு தகவல் கிடைக்கப் பெற்ற போதிலும், அதில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் தமக்கு தெரியாது என அவர் பதிலளித்தார்.

 
மூழ்கும் அபாயத்திலுள்ள கப்பல் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அல்லது இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பல் கிடையாது என்பது உறுதி எனவும் அவர் கூறினார். வெளிநாடொன்றிலிருந்து பயணித்த கப்பலிலேயே இந்த. அகதிகள் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த கப்பலில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த சூழ்நிலையில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கடல்மார்க்கமாக பலர் சட்டவிரோதமாக சென்றுள்ளனர்.

அத்துடன், இலங்கையிலிருந்து அகதிகளாக செல்ல முயற்சித்த பலரை, இலங்கை அதிகாரிகள் கடந்த காலங்களில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை மாதிரி யாரும் ஆகிடாதீங்க: டீக்கடை நடத்தி ரூ.5 கோடி சம்பாதித்த இளைஞரின் அறிவுரை!