Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். புள்ளி மீது "ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்ற" அமெரிக்கா

Afghanistan ISIS
Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (12:21 IST)
காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்கள் முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
 
நங்கஹார் மாகாணத்தில் வைத்து அந்த நபர் தாக்கப்பட்டார்.
 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே வியாழக்கிழமை நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 13 அமெரிக்கப் படையினர், 2 பிரிட்டன் நாட்டவர் மற்றும் பிரிட்டன் நாட்டவரின் குழந்தை ஒன்று உள்பட சுமார் 170 பேர் கொல்லப்பட்டனர். நாட்டை விட்டு வெளியேற விரும்பிய டஜன்கணக்கான ஆப்கானியர்களும் இதில் அடக்கம். இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக ஐஎஸ் அமைப்பின் ஒரு பிரிவான ஐஎஸ்-கே அறிவித்தது.
 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் கைப்பற்றிய நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் காபூல் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் வெளியேறி வருகின்றனர். விமான நிலையம் அமெரிக்கப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.கடந்த இரண்டு வாரத்தில் இந்த விமான நிலையம் மூலமாக சுமார் 1 லட்சம் பேர் வெளியேறி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆகஸ்ட் 31ம் தேதி தமது படையினர் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடவேண்டும் என்று அமெரிக்கா இலக்கு வைத்துள்ளது.
 
இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய ஜிஹாதிகளை 'மறக்கமாட்டோம், மன்னிக்கமாட்டோம். அவர்களை வேட்டையாடுவோம்' என்று வெள்ளிக்கிழமை சூளுரைத்திருந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
 
எப்படி நடந்தது ட்ரோன் தாக்குதல்?
நங்கஹார் மாகாணத்தில் நடந்த இந்த அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
"இலக்குவைத்த நபரை கொன்றுவிட்டோம் என்றே ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் யாரும் கொல்லப்பட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை," என்று அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைத் தளத்தை சேர்ந்த கேப்டன் பில் அர்பன் கூறியுள்ளார்.
 
இலக்குவைக்கப்பட்ட ஐ.எஸ். புள்ளி தாக்குதல்களை திட்டமிட்டவர் என்று பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
 
இலக்குவைக்கப்பட்ட நபர் வேறொரு ஐ.எஸ். உறுப்பினரோடு காரில் இருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலை நடத்திய ரீப்பர் ட்ரோன் மத்திய கிழக்கில் இருந்து ஏவப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
 
ஐஎஸ்-கே என்று சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லாமிக் ஸ்டேட்- கோரோசான் அமைப்பின் பல்லாயிரம் தீவிரவாதிகளில் பெரும்பாலோர் காபூலுக்கு கிழக்கே அமைந்துள்ள நங்கஹார் மாகாணத்தில்தான் ஒளிந்திருப்பதாக நம்பப்படுகிறது.
 
காபூல் விமான நிலையத்தில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், தங்கள் நாட்டவர்கள் விமான நிலையத்தின் வாயிற் கதவில் இருந்து தள்ளி இருக்கும்படி அமெரிக்க அதிகாரிகள் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
 
விமான நிலையத்துக்கு எதிராக இன்னமும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக "குறிப்பான, நம்பகமான" தகவல்கள் இருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
 
"எதிர்காலத் தாக்குதல் முயற்சிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். நிச்சயமாக தயாராக இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments