அமெரிக்க நாடாளுமன்றம் இருக்கும் கேபிடல் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார்.
வாஷிங்டன் டிசியில் இருக்கும் இந்தக் கட்டடத்தின் பாதுகாப்பு தடுப்புகளை மோதிக்கொண்டு ஒரு கார் உள்ளே சென்றது. பிறகு அதன் ஓட்டுநர் அங்கு இருந்த போலீஸ் அதிகாரி மீது கத்தியோடு பாய்ந்தார்.
போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் அந்த சந்தேக நபர் உயிரிழந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து சான்றளிக்கும் பணியில் நாடாளுமன்றம் ஈடுபட்டிருந்தபோது ஜனவரி மாதம் இந்த கட்டடத்துக்குள் புகுந்து டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம். அதன் பிறகு நடந்திருக்கும் இந்த தாக்குதல் பயங்கரவாதம் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சட்ட அமலாக்கத் துறை மீதோ, வேறு எவர் மீதோ இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தாலும், இதன் பின்னணியை ஆராய்ந்து அதன் அடியாழத்துக்குச் செல்லவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதை செய்வோம் என்று வாஷிங்டன் டிசி மெட்ரோபாலிடன் போலீசின் தற்காலிகத் தலைவர் ராபர்ட் கான்டீ தெரிவித்துள்ளார்.
"நமது அலுவலர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்று கனத்த இதயத்தோடு அறிவிக்கிறேன்" என கேபிடல் போலீஸ் படையின் தற்காலிகத் தலைவர் யோகானந்த பிட்மன் தெரிவித்தார். அந்த அதிகாரியின் பெயர் வில்லியம் பில்லி இவான்ஸ் என்று அவர் அறிவித்தார்.
தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் இந்தியானா மாகாணத்தைச் சேர்ந்த நோவா கிரீன் (25 வயது) என்று புலனாய்வில் ஈடுபட்டுள்ள சட்ட அமலாக்கத் துறையினர் கூறியதாக பிபிசி கூட்டாளி சிபிஎஸ் நியூஸ் கூறுகிறது.
அவரைப் பற்றி போலீஸ் துறை தரவுகளில் முன்கூட்டி தகவல் ஏதுமில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஃபேஸ்புக்கில் அவர் என்ன எழுதியிருந்தார்?
நோவா கிரீன் ஒரு ஃபேஸ்புக் கணக்கு வைத்திருந்தார். அது தற்போது அழிக்கப்பட்டிருக்கிறது. அழிக்கப்பட்ட அந்தப் பக்கத்தில், மார்ச் மாத நடுவில் அவர் ஒரு பதிவு எழுதியிருந்தார். அந்தப் பதிவில், தாம் சமீபத்தில் ஒரு வேலையை விட்டு விலகியதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு "ஓரளவு, வேதனைகள் காரணம். ஆனால், முக்கியமாக ஆன்மிகப் பயணத்தைத் தேடி" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். "தெரியாமல் நான் எடுத்துக்கொண்டிருந்த போதைப் பொருளின் பக்கவிளைவுகளால்" தாம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 'நேஷன் ஆஃப் இஸ்லாம்' என்ற கருப்பின தேசியவாத மதவாத இயக்கத்தின் மீது தமக்குள்ள ஈடுபாடு குறித்து அவர் விரிவாக எழுதியிருந்தார்.
அந்த ஃபேஸ்புக் பக்கம் கிரீனுக்கு சொந்தமானதுதான் என்பதை ஃபேஸ்புக் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவத்தை அடுத்து கேபிடல் கட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டம் தற்போது நடைபெறவில்லை என்பதால் அரசியல் தலைவர்கள் பெரும்பாலோர் தாக்குதல் நடந்தபோது கட்டடத்தில் இல்லை.
ஜனவரியில் நடந்த கேபிடல் கலவரம் - என்ன நடந்தது?
அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவையில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை அதிபராக தேர்வு செய்து சான்றளிக்கும் நடைமுறைக்காக, மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டம் கேப்பிடல் கட்டடத்தில் கடந்த ஜனவரி 7-ம் தேதி தொடங்கியது.
அந்த நடைமுறைகளை குலைக்கும் வகையில், டிரம்பின் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற கட்டடத்துக்குள் ஆயிரக்கணக்கில் திரண்டு சூறையாடினார்கள். அங்கிருந்த காவல்துறையினரால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.
இந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் எம்.பி.க்கள் அறை, அரங்குகள் ஆகியவற்றுக்குள்ளும் அவர்கள் புகுந்து பொருட்களை உடைத்தனர்.
அப்போது என்ன நடந்தது? விரிவாகப் படிக்க: அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: நடந்தது என்ன?
இதையடுத்து அமெரிக்க பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு குவிக்கப்பட்டனர். அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சுமார் நான்கு மணி நேரம் வீரர்களுக்கு தேவைப்பட்டது. இந்தக் கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.