நாள்: செப்டம்பர் 13. 'சென்னை துறைமுகத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கன்டெய்னரை காணவில்லை' என துறைமுகம் காவல் நிலையத்தில் சி.ஐ.டி.பி.எல் நிறுவன மேலாளர் பொன் இசக்கியப்பன் புகார் கூறியபோது, நேரம் இரவு 10 மணி.
மனுவில், கன்டெய்னரில் இருந்த ரூ.35 கோடி மதிப்பிலான டெல் நிறுவன லேப்டாப் பெட்டிகள் காணாமல் போனதாகக் கூறப்பட்டிருந்தது.
'இவ்வளவு பெரிய தொகையா?' என அதிர்ச்சியுடன் விசாரிக்கத் தொடங்கிய போலீசாருக்கு கன்டெய்னர் கடத்தலின் மூளையாக இருந்து அரங்கேற்றிய நபரைக் கைது செய்யவே 30 நாட்கள் ஆகிவிட்டது.
அதிக கெடுபிடிகள் நிறைந்த சென்னை துறைமுகத்தில் ஒரு கன்டெய்னர் மட்டும் களவாடப்பட்டது எப்படி? கன்டெய்னரை கடத்தியவர்கள் சிக்கியது எப்படி?
சீனாவின் ஷாங்காய் நகரத்தில் இயங்கும் டெல் நிறுவனம், கடல்சார் சரக்குகளைக் கையாளும் முகவரான டி.பி.ஷென்கர் (DB Schenker) நிறுவனம் மூலமாகக் கடந்த ஜூலை மாதத்தின் பின்பகுதியில் கன்டெய்னர் ஒன்றை அனுப்பியுள்ளது.
ஷாங்காயில் இருந்து சீ ஸ்பேன் (Sea span) என்ற கப்பலில் சுமார் 40 அடி நீளமுள்ள கன்டெய்னரில் டெல் நிறுவனத்தின் 5,230 நோட்புக் எனப்படும் லேப்டாப்கள் இருந்ததாகக் கூறுகிறார், துறைமுகம் காவல் உதவி ஆணையர் ராஜசேகரன்.
சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள டெல் நிறுவனத்தில் இதை ஒப்படைக்கும் பணியை டி.பி.ஷென்கர் நிறுவனம் எடுத்திருந்தது. செப்டம்பர் 7ஆம் தேதி சென்னை துறைமுகத்திற்குள் நுழைந்த சீ ஸ்பேன் கப்பல், கன்டெய்னர்களை கையாளும் சி.ஐ.டி.பி.எல்-லின் (சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல்ஸ் பிரைவேட் லிமிடெட்) டெர்மினலில் கன்டெய்னரை இறக்கிவிட்டது.
கடத்தலை அரங்கேற்றியது எப்படி?
"கன்டெய்னரை எடுப்பதற்கு சுங்கத்துறை நடைமுறைகளை டி.பி.ஷென்கர் நிறுவனம் தரப்பில் முடிக்க வேண்டும். பின்னர் துறைமுகத்தில் பொருள்களை இடமாற்றம் செய்வதற்கான ரசீதை (Equipments interchange receipt) சி.ஐ.டி.பி.எல் நிறுவன பிரதிநிதிகள் வழங்கிய பிறகே கன்டெய்னர் வெளியில் செல்லும். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை" என்கிறார் போலீஸ் உதவி ஆணையர் ராஜசேகரன்.
செப்டம்பர் 8ஆம் தேதியன்று சி.ஐ.டி.பி.எல் நிறுவனத்துக்கு டி.பி.ஷென்கர் நிறுவனம் இமெயில் ஒன்றை அனுப்பியது. அதில், கன்டெய்னரை எடுப்பதற்கு சுங்கத்துறைக்கு கட்டணம் செலுத்தியது உள்பட முக்கிய ஆவணங்களை இணைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், 'போதிய ஆவணங்கள் இல்லை' எனக் கூறி டி.பி.ஷென்கர் நிறுவனத்துக்கு சி.ஐ.டி.பி.எல் நிறுவனத்தின் ஆவண சரிபார்ப்பு பிரிவின் ஊழியரான இளவரசன் பதில் அனுப்பியுள்ளார்.
அதேநேரம், துறைமுகத்தில் இருந்து கன்டெய்னரை வெளியே எடுப்பதற்கு டி.பி.ஷென்கர் அனுப்பிய ஆவணங்களைத் தனது கணினியில் இளவரசன் பதிவேற்றிக் கொண்டதாகக் கூறுகிறார், உதவி ஆணையர் ராஜசேகரன்.
புகார் மனுவில் என்ன உள்ளது?
இந்தப் பதிலை எதிர்பார்க்காத டி.பி.ஷென்கர் நிறுவன பிரதிநிதிகள், செப்டம்பர் 11ஆம் தேதியன்று சி.ஐ.டி.பி.எல் நிறுவனத்துக்கு நேரில் வருவதாகக் கூறியுள்ளனர். ஆனால், 10ஆம் தேதி இரவே லேப்டாப் கன்டெய்னர் கடத்தப்பட்டுவிட்டது.
"செப்டம்பர் 10ஆம் தேதி இரவுப் பணியில் இளவரசன் இருந்தார். கன்டெய்னரை எடுத்துச் செல்வதற்கு அவரின் உயரதிகாரி ஒப்புதல் அளித்தது போல இளவரசன் ஆவணங்களைத் தயாரித்தார். அதைக் காட்டியே கன்டெய்னரை லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டார்" என்கிறார் ராஜசேகர்.
இதை அப்படியே தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார், சி.ஐ.டி.பி.எல் நிறுவன மேலாளர் பொன்.இசக்கியப்பன்.
அந்த மனுவில், கன்டெய்னரை வெளியே எடுத்துச் செல்வதற்காக சி.ஐ.டி.பி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் வெங்கட்ராமனின் யூசர் ஐடி, பாஸ்வேர்டை இளவரசன் பயன்படுத்தியதாகவும் கன்டெய்னரில் 34 கோடியே 98 லட்ச ரூபாய் மதிப்புள்ள 5230 டெல் நோட்புக் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், "டி.பி.ஷென்கர், சி.ஐ.டி.பி.எல் ஆகிவற்றுக்கு இடையே நடந்த இமெயில் உரையாடல்களை இளவரசன் அழித்துவிட்டதால், துறைமுகத்திற்குள் கன்டெய்னர் வந்த ஆவணங்கள் மட்டுமே இருந்தன.
செப்டம்பர் 10ஆம் தேதி இரவு 12.38 மணிக்கு துறைமுகத்திற்குள் ஒரு லாரி வந்து சென்றதாக மட்டும் பதிவாகியிருந்தது" என பிபிசி தமிழிடம் ராஜசேகர் குறிப்பிட்டார்.
ஆனால், கன்டெய்னரை கடத்திய இளவரசன் குழுவுக்கு அதன் பிறகே அதிர்ச்சிகள் காத்திருந்ததாகக் கூறுகிறார், துறைமுகம் காவல்நிலைய ஆய்வாளர் சிலம்பு செல்வன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், " கடத்தலுக்கு முன்னதாகப் பல்வேறு ஒத்திகைகளை இளவரசன் பார்த்துள்ளார். தனக்கு உதவியாக முத்துராஜ், திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ், நெப்போலியன், சிவபாலன், அரசுச் பேருந்து கழக ஓட்டுநர் சங்கரன் உள்பட சிலரைக் கூட்டு சேர்த்துக் கொண்டார்" என்று விவரித்தார்.
ஜி.பி.எஸ் கொடுத்த அதிர்ச்சி
மேற்கொண்டு விவரித்தவர், "இவர்களில் சிலர் கன்டெய்னரை வேறு லாரிகளில் ஏற்றுவதற்காக உதவி செய்ய வந்தவர்கள். துறைமுகத்தில் இருந்து லாரி வெளியே வந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தோம். அதற்குள் ஜி.பி.எஸ் கருவி இருந்ததாகக் கூறியதால் அதைப் பின்தொடர்ந்தோம்.
திருவொற்றியூர் வழியாகக் கிளம்பிய லாரி, திருவள்ளூரில் மணவாளன் நகரில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. லாரியின் உரிமையாளரை வரவழைத்து விசாரித்தபோது, முழு விவரமும் தெரிய வந்தது" என்றார்.
துறைமுகத்தில் இருந்து வெளியே வந்தபோது, கன்டெய்னரின் மேற்புறத்தில் ஜி.பி.எஸ் கருவி இருந்ததைக் கவனித்த இளவரசன், அதை உடைத்த பிறகே லாரியை எடுத்துச் சென்றதாகக் கூறுகிறார் சிலம்பு செல்வன்.
இருப்பினும் அதன் பிறகு, 40 அடி நீள கன்டெய்னரில் இருந்த பொருள்களை இரண்டு 20 அடி நீளமுள்ள வாகனங்களில் ஏற்ற முயன்றபோது, உள்ளே மேலும் சில ஜி.பி.எஸ் கருவிகள் இருந்ததைப் பார்த்து இளவரசன் அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார் சிலம்பு செல்வன்.
"இந்த இரண்டு லாரிகளையும் பெங்களூரு செல்வவதற்காக ஒரு லட்ச ரூபாய் வரையில் விலை பேசி வரவழைத்துள்ளார். கன்டெய்னரை உடைப்பதற்கே இவர்களுக்கு 45 நிமிடம் ஆகியுள்ளது.
ஜி.பி.எஸ் கருவியைப் பார்த்த பிறகு, 'எப்படியும் சிக்கிவிடுவோம்' எனப் பயந்து லாரியை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்" என்கிறார் சிலம்பு செல்வன்.
'எஞ்சியது 4 லேப்டாப்கள்'
இரண்டு லாரிகளையும் துறைமுகத்திற்குக் கொண்டு வந்து லேப்டாப் பெட்டிகளை எண்ணிப் பார்த்தபோது, 5,207 லேப்டாப்கள் இருந்துள்ளன.
சென்னையில் இருந்த தப்பிய இளவரசன், கையில் 23 லேப்டாப்களை எடுத்துக் கொண்டு மும்பைக்குச் சென்றதாகக் கூறுகிறார் சிலம்பு செல்வன்.
"தன்னிடம் இருந்த லேப்டாப்களை வெறும் ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். ஆனால் அதன் மதிப்பு தலா ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மேல் வரும். காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் சிக்கும்போது அவரிடம் நான்கு லேப்டாப்கள் மட்டுமே இருந்தன," என்று சிலம்பு செல்வன் இளவரசன் கைது செய்யப்பட்ட தருணத்தை விவரித்தார்.
பின்னணி என்ன?
"ஏன் இப்படியொரு கொள்ளை முயற்சியில் ஈடுபட வேண்டும்?" என துறைமுகம் காவல் உதவி ஆணையர் ராஜசேகரனிடம் கேட்டோம். அதற்கு, "கடன் நெருக்கடிகள்தான் காரணம். சி.ஐ.டி.பி.எல் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக இளவரசன் வேலை பார்த்து வந்துள்ளார்" என்கிறார்.
"அவருக்கு 15 லட்ச ரூபாய் கடன் உள்ளது. மாத சம்பளமாக 33 ஆயிரம் ரூபாய் வருகிறது. மாத வட்டிக்கே 15 ஆயிரம் ரூபாய் கட்டுவதாகக் கூறுகிறார். இந்நிலையில், இந்த ஒரு கொள்ளையை நடத்தி செட்டில் ஆகிவிடலாம் என்று அவர் கணக்கு போட்டுள்ளார்.
ஆனால், இன்வாய்ஸ் இல்லாமல் லேப்டாப்களை விற்க முடியவில்லை. சிக்காமல் இருந்திருந்தால் மும்பை வழியாக வெளிநாடு தப்பிச் செல்வதுதான் அவரின் திட்டமாக இருந்தது" என்றும் கூறுகிறார் ராஜசேகரன்.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் கைதானவர்கள் மீது பிஎன்எஸ் 2023ஆம் ஆண்டு சட்டத்தின்படி 305, 306 ஆகிய பிரிவுகளின்கீழ் துறைமுக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
"இதற்கு முன்பு துறைமுகத்தில் இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை" எனக் கூறிய உதவி ஆணையர் ராஜசேகரன், "பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தாலும் ஆவணங்கள் முறையாக இருந்ததால் எந்தவித சிக்கலும் இல்லாமல் கன்டெய்னரை கடத்தியுள்ளனர். இனி வரும் நாட்களில் பாதுகாப்பு தொடர்பாகப் புதிய நடைமுறைகளை சி.ஐ.டி.பி.எல் நிறுவனம் கடைப்பிடிக்க உள்ளது" என்றார்.
சி.ஐ.டி.பி.எல் நிறுவன மேலாளர் பொன் இசக்கியப்பனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "காவல்துறையில் அனைத்து விவரங்களையும் தெரிவித்துவிட்டேன். இந்த விவகாரம் குறித்துப் புதிதாகப் பேசுவதற்கு எதுவும் இல்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு