கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் மேலும் இருவருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பற்றி தற்போது இந்தியாவில் அதிகம் பேசப்படுகிறது.
கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் தொற்றுநோயாகப் பரவத் தொடங்கிய இந்த வைரஸ், இப்போது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது. அப்போதிலிருந்து இந்தியாவும் அதிக எச்சரிக்கையுடன் இருந்து வருகிறது.
1. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் நிலை என்ன?
இந்தியாவில் இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 5 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை புதிதாக இருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ் கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு பாதித்திருப்பது முன்பு கண்டறியப்பட்டிருந்தது. மூன்று பேருக்கும் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் சீனாவில் இருந்து வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இப்போது டெல்லியில் ஒருவருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும் இந்தப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தனிப் பகுதியில் வைத்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெல்லியில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டவர் இத்தாலியில் இருந்தும், தெலங்கானாவில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர் துபாயில் இருந்தும் வந்திருக்கிறார்கள்.
கொரோனாவைரஸ் பாதிப்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் 23 பேர் குறித்த பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப் படுகின்றன. எல்லாமே மிக உயர்ந்த நிலையில் கண்காணிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் டெல்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய பாதிப்புகள் பற்றி நமக்கு என்ன தெரியும்?
டெல்லியில் வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர் குறித்த அதிக தகவல்கள் எதுவும் இல்லை. அவர் இத்தாலியில் இருந்து வந்தவர் என்பது மட்டுமே நமக்குத் தெரிந்துள்ளது. அந்த நோயாளியே தனது உடல்நிலை பற்றி கூறியதை அடுத்து, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தெலங்கானாவில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர் பிப்ரவரி 17 ஆம் தேதி துபாயில் இருந்து வந்தவர் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எட்டலா ராஜேந்திரா தெரிவித்துள்ளார். துபாயில் ஹாங்காங்கை சேர்ந்த சிலருடன் இவர் வேலை பார்த்துள்ளார். சந்தேகத்துக்குரிய அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது, அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இப்போது அவரை தனி வார்டில் அளித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவர் பெங்களூருவில் இருந்து பேருந்து மூலம் ஹைதராபாத் நகருக்கு சென்றுள்ளார். அந்தப் பேருந்தில் இருந்த 27 பயணிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இப்போது பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் இருந்து வந்துள்ள மற்றொருவரின் ரத்தமும் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருடைய ரத்தம் எடுத்து புனேவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
3. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்திய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது?
இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. பெரிய மற்றும் சிறிய துறைமுகங்கள், விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. எல்லைகளிலும் பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய விமான நிலையங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள 12 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் இப்போது வியட்நாம், இந்தோனீசியா, மலேசியா, இரான், இத்தாலி மற்றும் நேபாளத்தில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்குச் செல்வதற்கு, தனியாக பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 21 துறைமுகங்களில் இந்தப் பரிசோதனைகள் நடைபெறுகின்றன.
மேற்படி நாடுகளில் இருந்து வரும் விமானங்களில், இந்தப் பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்குமாறு கோரி பயணத்தின் போது விமானத்துக்குள்ளேயே அறிவிப்புகள் செய்யும்படி, அனைத்து விமான நிறுவனங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 21 விமான நிலையங்களில் 5,57,431 பேருக்கு இந்த மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
துறைமுகங்கள்
இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்களும், 65 சிறிய துறைமுகங்களும் உள்ளன. அவற்றில் மொத்தம் 12,431 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
எல்லைப்பகுதிகள்
நேபாளத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பிகார், மேற்குவங்கம், சிக்கிம் என ஐந்து மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. அங்கு வரும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் நிலையில், இதுவரை மொத்தம் 10,24,922 பேருக்கு பரிசோதனைகள் நடந்துள்ளன.
இந்த எல்லைப் பகுதிகளில் உள்ள சுமார் 3,695 கிராமங்களிலும் நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
4. இந்தியர்களுக்கு பயண அறிவுறுத்தல் ஏதும் உள்ளதா?
ஆமாம். பயணத்துக்கான அறிவுறுத்தல் ஒன்று இருக்கிறது. சீனா மற்றும் இரானுக்கான அனைத்து விசா அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தாலி, கொரியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு அரசு எச்சரிக்கை அறிவிப்பு அளித்துள்ளது. சூழ்நிலைகளைப் பொருத்து, மற்ற நாடுகளுக்கும் இதுபோன்ற எச்சரிக்கைகளை அரசு விரிவுபடுத்தலாம்.
பயணத்துக்கான நடைமுறைகள் குறித்து அந்தந்த நாடுகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வருவது தொடர்பாக இரான் மற்றும் இத்தாலி அரசுகளுடன் இந்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வோர், சாத்தியமானால் அந்தப் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
5. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ ரீதியில் இந்தியா தயாராக இருக்கிறதா?
சந்தேகத்துக்குரியவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தும் வசதிகளைக் கொண்ட 15 மருத்துவ ஆய்வகங்கள் இந்தியாவில் உள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் 19 ஆய்வகங்கள் தயாராகிவிடும்.
தேவை ஏற்பட்டால் 50 ஆய்வகங்களை உருவாக்க தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி அருகே சாவ்லாவில் இந்திய - திபெத் எல்லைக் காவல் படை (ஐ.டி.பி.பி.) மையத்தில், தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. வுஹானில் இருந்து வந்த 112 பேரும், ஜப்பானில் இருந்து வந்த 124 பேரும் அங்கு இப்போது உள்ளனர்.
டெல்லியில் திங்கட்கிழமை நடந்த அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தில், இதற்குத் தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் வைத்திருப்பதாக பார்மசூட்டிகல்ஸ் துறை தெரிவித்துள்ளது.
பாதிப்பு கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமையில் வைக்கப்பட்டிருப்பவர்களை, அடிப்படை நிலையில் உள்ள சுகாதார அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுவரையில் 25,738 பேர் வீடுகளில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர். அந்தக் குடும்பத்தினர் மற்றும் அவர்கள் பணியாற்றும் அலுவலகங்களுக்கு சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்து, நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
011-23978046 என்ற உதவிக்கான தொலைபேசி எண் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
6. நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி கண்டறிவது?
இந்தியாவில், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. விமான நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்டுள்ள 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், தங்கள் ஆரோக்கியம் குறித்து தாங்களாகவே தகவல் தெரிவிக்கும் ஒரு படிவம் தரப்பட்டுள்ளது. அவர்கள் இறங்கி வந்தவுடன், வெப்ப மாறுபாட்டைக் கண்டறியும் தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தி அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படுகிறது.
காய்ச்சல் இருப்பதாகக் கண்டறியப் படுபவர்கள் டாக்டரிடம் அழைத்துச் செல்லப்படுவர். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை மருத்துவ துணை அலுவலர்கள் ஆய்வு செய்து, ரத்த மாதிரிகளை சேகரிக்கின்றனர். உடல்நிலையின் தீவிரத்தைப் பொருத்து, அவர்கள் தனிமை வார்டுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். காய்ச்சல் இல்லாதவர்கள், அடுத்த 14 நாட்களுக்கு ஏதும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனையை உடனே நாட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
7. ஆரம்பகட்ட அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், இருமல், வேகமான சுவாசம் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன. தீவிர பாதிப்புகள் இருந்தால், நிமோனியா அல்லது சுவாசத்தில் சிரமங்கள் ஏற்படலாம். அரிதான நிகழ்வாக, இந்தப் பாதிப்பால் மரணம் ஏற்படக் கூடும்.
இதன் அறிகுறிகள் புளூ அல்லது சாதாரண சளி போன்றவற்றின் அறிகுறிகளாக இருக்கும். அதனால் தான் COVID-19 பாதிப்பு இருப்பவர்களுக்குப் பரிசோதனைகள் தேவைப்படுகிறது.
உங்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது?
உடல் ரீதியாக தொடுதலைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வப்போது கைகளைக் கழுவ வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
இருமல் அல்லது தும்மல் வரும்போது முகத்தை மூடிக் கொள்ளுமாறு தீவிர ஆலோசனையாக கூறப்படுகிறது.
ஏதாவது அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவ அதிகாரியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முகத்திற்கு மாஸ்க் அணிய வேண்டுமா?
உங்களுக்கு சுவாசக் கோளாறு (இருமல் அல்லது தும்மல்) இருந்தால், மருத்துவ மாஸ்க் அணிந்து கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்படுகிறது. அறிகுறிகள் ஏதும் இல்லாவிட்டால், மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
மாஸ்க் அணிந்தால், அவற்றின் செயல்பாடு சிறப்பாக இருப்பதை உறுதி செய்ய, அணிந்த பிறகு, முறைப்படி அவற்றை அகற்ற வேண்டும். வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகரித்துவிடாமல் தடுக்க, அவற்றை முறையாக அகற்றிட வேண்டும்.
தொற்று பரவுவதைத் தடுக்க, மாஸ்க் பயன்படுத்துவது மட்டும் போதாது. அடிக்கடி கை கழுவுதல், தும்மல் மற்றும் இருமலின் போது முகத்தை மூடிக் கொள்வது, சளி அல்லது ஃபுளூ போன்ற அறிகுறிகள் (இருமல், தும்மல், காய்ச்சல்) இருப்பவர்களை தொடுவதைத் தவிர்த்தல் ஆகியவையும் அவசியம் தேவைப்படுகின்றன.