Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்கின் உதவியோடு காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பது எப்படி?

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (09:08 IST)
ஐரோப்பியர்களின் மூக்குகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வருடிய வாசனைகளை அடையாளம் கண்டு மீண்டும் உருவாக்கும் பணியை 3 ஆண்டு ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொண்டுள்ளது ஒரு ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலியில் வாழ்ந்த கலைஞர் லியனார்டோ டா வின்சி. இவரது ஓவியங்களில் மிகுந்த புகழ் பெற்றது புன்முறுவல் பூக்கும் 'மோனாலிசா' என்ற பெண் ஓவியம்.

அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள வைக்கப்பட்டுள்ள இது போன்ற பழங்கால ஓவியங்களைப் பார்ப்பதற்கென்றே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர்.

ஒரு கற்பனை செய்து பாருங்கள். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த மோனோலிசா ஓவியத்தைப் பார்க்கும் ஒருவர், அது வரையப்பட்ட இடத்தில், வரையப்பட்ட காலத்தில் இருந்த வாசனையையும் முகர முடிந்தால் எப்படி இருக்கும்? கண்ணில் 16-ம் நூற்றாண்டின் காட்சி. மூக்கில் 16ம் நூற்றாண்டின் வாசனை. பெரிய வேடிக்கைதானே?

ஆனால்... இது சாத்தியமா? பழங்காலத்தில் என்ன வாசனை நிலவியது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?அப்படி கண்டுபிடித்தாலும், அதை மீண்டும் எப்படி உருவாக்குவது?

முடியும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்.

இப்படி ஐரோப்பியாவில் நிலவிய பழங்கால வாசனைகளை அடையாளம் கண்டு, அதை மீளாக்கம் செய்வதற்கென்று சில ஐரோப்பிய விஞ்ஞானிகள் இணைந்து குழுவாக ஓர் ஆராய்ச்சித் திட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தக் குழு மூன்று ஆண்டுகளில் தாங்கள் நினைத்ததை சாதிக்கவேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.

காட்சியின் மூலமாக மட்டுமல்ல, வாசனையின் மூலமாகவும் உங்களை கடந்த காலத்துக்கு இட்டுச் செல்லவேண்டும் என்பது இவர்களின் இலக்கு.

அருங்காட்சியகத்துக்கு வருகிற பார்வையாளர்களுக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சியை, வேடிக்கையை ஏற்படுத்துவது இந்த மட்டுமே இந்த விஞ்ஞானிகளின் நோக்கம் அல்ல.

முதலில் 16-ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரையில் ஐரோப்பாவில் நிலவிய முக்கிய வாசனைகளை அடுத்த மூன்றாண்டுகளில் அடையாளம் காணவேண்டும். பிறகு இந்தக் கண்டத்தில் நிலவிய வாசனைகளின் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது இவர்கள் இலக்கு.

ஆடியுரோப்பா (Odeuropa) என்று பெயர் வைக்கப்பட்ட இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கு 33 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புக்கு பணம் செலவாகும். இந்தப் பணத்தை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகிறது. சுமார் 20 வல்லுநர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள். வாசனை வரலாற்றாளர்கள், வாசனை திரவிய வல்லுநர்கள், கணினி விஞ்ஞானிகள், வேதியியல் விஞ்ஞானிகள் போன்றோர் இதில் அடக்கம்.

இவர்கள் உருவாக்கும் வாசனை கலைக்களஞ்சியத்தில் இடம் பெறும் வாசனைகள், இப்போது நடைமுறையில் இருப்பவை அல்ல. இலக்கிய வருணனைகளில் மட்டுமே இருப்பவை அவை. இந்த வாசனைகள் தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் உருவாக்கப்படும்.

தொழிற்புரட்சிக் காலத்தில் ஐரோப்பிய நகரங்களில் நிலவிய வாசனை போன்ற பழங்கால வாசனைகளை இந்த ஆராய்ச்சித் திட்டம் மீண்டும் உருவாக்க முயலும்.

பிரஞ்சுப் புரட்சிக்கு முன்பு வரை பிரான்சின் அரசியாக இருந்த மேரி அன்டாய்னெட் பயன்படுத்திய வாசனை திரவியத்தின் நறுமணம் முதல் தொழிற்புரட்சிக் காலத்தில் இருந்த உலோகத் தொழிற்சாலையின் நெடி வரை பல்வேறு விதமான பழங்கால வாசனைகள் இப்படி மீள் உருவாக்கம் செய்யப்படும்.

தொல் வாசனையியல்
பழங்கால வாசனை உணர்வுகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதுதான் இந்த ஆராய்ச்சியின் பணி என்று பிபிசியிடம் விளக்கினார் இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் தலைவரும், டச்சு பண்பாட்டு வரலாற்றாளருமான இங்கர் லீமான்ஸ்.

"நம்முடைய அனுபவங்களை வாசனைகள் வடிவமைக்கின்றன. ஆனால், நம்மிடம் கடந்த காலத்தில் அந்தப் புலனுணர்வு எப்படி இருந்தது என்பது குறித்து போதிய தகவல்கள் இல்லை. வாசனை என்பது நிலைத்து உறுதியாக இருப்பது அல்ல. வெகு விரைவில் கலைந்துவிடக் கூடிய உணர்வு அது. எனவே, அதனை எப்படி பொத்திப் பாதுகாப்பது என்பது குறித்து நாம் சிந்திக்கவேண்டும்" என்கிறார் அவர்.

இதோ இந்தக் குறிப்பில், 'ஆம்ஸ்டர்டாம் நகரம் துர்நாற்றம் வீசும் சுவாசம் கொண்ட அழகிய கன்னிப் பெண்' என்று வருணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சிப் பணி வரும் ஜனவரி மாதம் தொடங்கும். வரலாற்று ஆவணங்களிலும், கலைப் படைப்புகளிலும், அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள தொல் பொருள்களிலும் காணப்படும் பழங்காலத்தின் வாசனைகளைப் பற்றிய குறிப்புகளை இந்த ஆராய்ச்சிக் குழு தேடும். பல மொழிகளிலும் வாசனை பற்றி உள்ள குறிப்புகள் கணினி அல்காரிதம் உதவியுடன் தேடப்படும்.

வாசனையை உணர்வதற்கு மூளையில் உள்ள பகுதிக்குப் பெயர் 'ஆல்ஃபேக்டரி லோப்' என்பதாகும். இந்த ஆல்ஃபேக்டரி உணர்வுப் பகுதியின் முக்கியத்துவத்தை தற்போதைய கோவிட்-19 உலகத் தொற்று உணர்த்திவிட்டது என்கிறார் இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் ஈடுபட்டுள்ள வில்லியம் டுல்லெட் என்கிற வாசனை வரலாற்றாளர். பிரிட்டனின் ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் இவர்.

"நம் தினசரி வாழ்க்கைக்கு வாசனை மிக முக்கியம். கோவிட் 19 தொற்று ஏற்பட்டு அதனால் வாசனை உணர்வு இழந்தவர்களைப் பார்க்கும்போது அது நமக்குப் புரியும். மனித அனுபவங்களின் அடிப்படையான பகுதி வாசனை என்பதை புரிந்துகொள்வதும், அந்த வாசனைகளை மீட்டமைப்பதும் தேவை" என்று பிபிசியிடம் தெரிவித்தார் அவர்.

பிரெஞ்சுப் புரட்சி காலத்தில் பிரான்ஸ் அரசியாக இருந்தவர் மேரி அன்டாய்னெட். ரொட்டி இல்லை என மக்கள் மன்றாடியபோது கேக் சாப்பிடுங்கள் என்று இவர் கூறியதாக சொல்லப்படும் வாசகம் மூலம் அறியப்பட்டவர். அவரது வாசகம் தெரியும். வாசம் தெரியுமா?

ஆனால், கடந்த காலத்தின் வாசனையை மீட்டெடுப்பது எப்படி?

ஒரு நகரின் வாசனைகள்
அதைச் செய்வதற்குப் பல வழிமுறைகள் இருக்கின்றன என்கிறார் லீமான்ஸ். எடுத்துக்காட்டாக, வரலாற்றுப் பொருள்களின் வாசனையைக் கண்டறிவதற்கு அவற்றின் துகள்களைப் பிரித்தெடுத்து அதன் வேதிக் கட்டமைப்பை கண்டறிவதன் மூலம் வாசனையை மீட்டெடுக்கலாம். இதற்கான தொழில்நுட்பம் வேதியியல் வல்லுநர்களிடம் உள்ளது.

ஒரு இடத்தில் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் நிலவிய நிலைமைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் எப்படி வாசனை இருந்திருக்கும் என்று விரித்துணரும் வழிமுறையும் உள்ளது.

இப்படி வாசனையை அடையாளம் கண்டபிறகு, வேதியியல் மற்றும் வாசனையியல் வல்லுநர்கள் கடந்த காலத்தின் நறுமணம், துர்நாற்றம் ஆகியவற்றை மீட்டுருவாக்கம் செய்து ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் உள்ள பழங்காலப் படைப்புகளின் அருகே அதைப் பயன்படுத்துவார்கள். இதன் மூலம் அருங்காட்சியகங்களில் பழங்காலத்துக்கே சென்ற உணர்வு இன்னும் அழுத்தமாக ஏற்படும்.

இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் காரோ வெர்பீக். புலனுணர்வுகளின் வரலாற்றியல் வல்லுநரான இவர், கடந்த 20 ஆண்டுகளாக வாசனை அனுபவங்களைத் தொகுத்துப் பாதுகாக்கிறார். ஆம்ஸ்டெர்டாம் நகரின் ரிஜ்க் மியூசியத்தில் 2015ல் இந்தப் பணியைச் செய்தார் இவர்.

இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பல புகழ்பெற்ற கலைப் படைப்புகளுக்கான வாசனைகளை இவர் உருவாக்கினார். இந்தப் பணியில் இவரோடு பிர்ஜித் சிஜ்பிரான்ஸ், பெர்னார்டோ ஃப்ளெமிங் ஆகிய இரு வாசனை திரவிய வல்லுநர்கள் இணைந்து செயல்பட்டனர்.

ஜான் வில்லெம் பைன்மென் வரைந்த புகழ்பெற்ற 1824ம் ஆண்டின் 'வாட்டர்லூ சண்டை' என்ற ஓவியத்துக்கு உரிய வாசனையையும் இவர்கள் உருவாக்கினர். துப்பாக்கி ரவை, மண், குதிரை, தோல் ஆகியவற்றின் வாசனைகளை இணைத்து இதற்கான வாசனை உருவாக்கப்பட்டது. இந்த வாசனையை வெளியிடும் ஊதுபத்தி போன்ற பொருள் மூலம் வாட்டர்லூ சண்டையின்போது இருந்த வாசனை மீளுருவாக்கம் செய்யப்பட்டு அந்த ஓவியத்துக்கு அருகில் அந்த வாசனை நிலவும்படி செய்யப்பட்டது என்று விளக்கினார் வெர்பீக்.

மக்கள் கலைப் படைப்புகளை பார்க்கும் விதத்தையே இது முழுதாக மாற்றியமைத்துவிட்டது என்று கூறும் வெர்பீக், இந்தக் கலைப்படைப்புகளைப் பார்ப்பதற்கு எல்லோரையும் உள்ளடக்கும் வழிமுறையாகவும் இது இருக்கும் என்கிறார். எடுத்துக்காட்டாக, பார்வையற்றவர்களை நினைத்துப் பாருங்கள் புரியும் என்கிறார் அவர்.

பழங்காலம் பற்றிய நம் அனுபவத்தை இந்த ஆடியுரோப்பா திட்டம் வலுவாக்கி மெருகூட்டும் என்று நம்புகிறார் வெர்பீக். இந்த ஆராய்ச்சித் திட்டத்தால் 'இன்னும் நிறைய பேர் வரலாற்றை முகர்ந்து பார்க்க முடியும்' என்று நம்புகிறார் இவர்.

"பழங்காலத்தின் வாசனையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்த திட்டம் தற்போது அதை கண்டுணர்ந்து மீளக் கட்டமைக்க உதவும்" என்கிறார் இவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments