Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் கருத்து: தனி நாடு, கூட்டாட்சி என்றெல்லாம் பேசப்போவதில்லை, யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்பதே சரி

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (12:05 IST)
(இன்று 02.04.2021 வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்).

இந்திய ஐக்கிய அரசுகள் என்று பொருள்படும், யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்ற மாதிரிதான் இந்தியாவுக்குத் தேவை என்று சீமான் கூறியுள்ளார்.

இந்து தமிழ்திசை நாளிதழ் அவரிடம் எடுத்த நேர்க்காணலில், உங்களுடைய 'நாம் தமிழர் கட்சி'யின் இலக்கு என்ன? அண்ணா விட்டுச்சென்ற கூட்டாட்சி எனும் புள்ளியின் தொடர்ச்சியா அல்லது தமிழ்த் தேசிய அரசியலின் தொடக்கப் புள்ளியான தனிநாடு கனவா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு "தனி நாடு அல்லது கூட்டாட்சி அது இது என்றெல்லாம் நான் பேசப்போவதில்லை. என் இனத்துக்குத் தேவை அதிகாரம். பல்லாயிரம் ஆண்டுகளாக இது தமிழ் தேசம்தான்; இந்தியா என்கிற நாடு எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுந்து உருவாவதற்கு முன்பும் இது தமிழ் தேசம்தான்; இப்போதும் தமிழ் தேசம்தான். ஆட்சியாளர்கள் யார் என்பதை விடுங்கள்.

இந்தியா என்பதே பல நாடுகளின் ஒன்றியம் தானே! 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா' மாதிரி 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா'. அப்படிச் செய்வோம்! 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி' என்பது அண்ணா முன்வைத்த முழக்கம். எல்லா தேசிய இனங்களுக்கும் அதுதான் சரி. இப்போதுள்ள ஆட்சி முறையில் மாநில உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. வட இந்தியர்கள்தான் நாட்டின் முதன்மை அமைச்சர்களாக ஆக முடியும் என்கிற சூழல் போதாதா, இங்குள்ள அக்கிரமச் சூழலைச் சொல்ல? இந்த நிலை மாற்றப்பட வேண்டும். என் மக்களுக்கும் அதிகாரம் வேண்டும். இதைத்தான் நான் பேசுறேன்" என விடையளித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

20 ரூபாய் கொடுத்தால் மதுபாட்டில், புதுவையில் ஒரு தேர்தல் விளையாட்டு

புதுச்சேரியில் தேர்தலில் புதுமையான உத்தியைப் பயன்படுத்தி, 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்தால் மது பாட்டில் விநியோகித்த மதுக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

புதுச்சேரி கலால்துறை தாசில்தார் மணிகண்டன், காவல் ஆய்வாளர் ரமே‌‌ஷ், வருவாய் ஆய்வாளர் பிரேம் பிரகா‌‌ஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று நோணாங்குப்பம் படகு குழாம் அருகே குபேரன் நகரில் உள்ள மதுக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த 2 பேர் புதிய ரூ.20 நோட்டுகளை கொடுத்து 48 குவாட்டர் மதுபாட்டில்களை வாங்கினர். இதைப்பார்த்ததும் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பத்தை சேர்ந்த சிவநேசன் (வயது 51), முருகையன் (52) என்பதும், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக மதுபாட்டில்கள் வாங்கியதும், இதற்காக புதிய 20 ரூபாய் நோட்டுகளை டோக்கனாக பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதை கேட்டதும் கலால்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த கடையில் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதன் எதிரொலியாக கலால்துறை துணை ஆணையர் சுதாகர் நேற்று அந்த மதுக்கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கலால்துறை அதிகாரிகள் நேற்று அந்த மதுபான கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

'கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் இரண்டும் 'லவ் ஜிஹாத்' சட்டம் நிறைவேற்ற முயலவில்லை'

கேரளத்தை ஆட்சி செய்த இடதுசாரி முன்னணியும், எதிர்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் 'லவ் ஜிஹாத்'துக்கு எதிராக சட்டம் கொண்டு வர எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்ததாக தினமணியில் செய்தி வெளியாகி இருக்கிறது.

ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஹரிபாட் தொகுதியில் பாஜகவுக்கு ஆதரவாக வியாழக்கிழமை அவா் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவா் பேசியதாவது:
2009-இல் 'லவ் ஜிஹாத்'துக்கு எதிராக கேரள உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்த பிறகும், கேரளத்தை ஆட்சி செய்த இடது முன்னணியும், எதிர்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் 'லவ் ஜிஹாத்'துக்கு எதிராக சட்டம் கொண்டுவர முயற்சி எடுக்கவில்லை.

உத்தர பிரதேசத்தில் 'லவ் ஜிஹாத்'துக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்படும் போது கேரளத்தில் ஏன் நிறைவேற்ற முடியவில்லை?

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ), அந்த அமைப்பின் அரசியல் கட்சியான எஸ்டிபிஐ ஆகியவை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த அமைப்பின் மீது ஐக்கிய ஜனநாயக முன்னணியும், இடதுசாரி ஜனநாயக முன்னணியும் நடவடிக்கை எடுப்பதில்லை.

கேரளத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் மாநிலம் வளா்ச்சிப் பாதையில் செல்லும். விவசாயிகள், மீனவா்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனப் பேசியதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments