Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீரிகள் ஆக்ரா சிறையில்: கைதுக்கு காரணம் கூட கூறவில்லை என்று உறவினர்கள் வேதனை

Advertiesment
BBC Tamil
, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (19:26 IST)
ஆக்ராவில் வெள்ளிக்கிழமையன்று மிகவும் வெப்பமாகவும், புழுக்கமாகவும் இருந்தது. ஆனால் எப்போதாவது வீசும் லேசான காற்று, இவற்றை தாங்கிக் கொள்ள உதவியது.

குளிர் பிரதேசமான காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வந்துள்ள ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த சூடு தாங்க முடியாததாக இருந்தது.

சிறையில் உள்ள தங்களது நேசத்துக்கு உரியவர்களை சிறிது நேரம் சந்தித்துப் பேசுவதற்காக, ஆக்ரா மத்திய சிறை நுழைவாயிலுக்கு வெளியே பெரிய காத்திருப்போர் பகுதியில் அவர்கள் காத்திருக்கின்றனர்.

அது பழக்கமில்லாத பகுதி என்பது அவர்களுடைய பார்வையில் இருந்தே தெரிகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்ட பல நூறு பேர் வெவ்வேறு மாநிலங்களின் சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் இந்த விஷயத்தில் மவுனம் சாதிக்கிறார்கள்.

காஷ்மீரைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள், பலத்த காவல் உள்ள ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அது அதிக வெப்பமானதாகவும், நாற்றமடிப்பதாகவும் உள்ளது.

அதே ஹாலில் ஆண்கள் மற்றும் பெண்களின் கழிப்பறைகளில் இருந்து வீசும் துர்நாற்றம், அங்கே காத்திருப்பதை கஷ்டமானதாக ஆக்குகிறது.

``இங்கு அதிக வெப்பமாக இருக்கிறது. இங்கேயே இறந்துவிடுவேன் போல தெரிகிறது'' என்று பளபளக்கும் தாடி வைத்திருந்த ஒருவர் வியர்வையை தன் சட்டையால் துடைத்தபடி கூறினார்.

``என் பெயரைக் கேட்காதீர்கள். எங்களுக்கும் தொந்தரவு தருவார்கள்'' என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவர் ஸ்ரீநகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புல்வாமா பகுதியைச் சேர்ந்தவர். தனது சகோதரரை சந்திக்க காத்திருக்கிறார்.
BBC Tamil

``ஆகஸ்ட் 4 ஆம் தேதி பின்னிரவில் அவரைக் கைது செய்தார்கள். பாதுகாப்புப் படையினர் இரண்டு, மூன்று வாகனங்களில் வந்தனர். சகோதரரை எங்கு அழைத்துச் செல்கிறோம் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை'' என்று அவர் கூறினார்.

``சகோதரனை ஏன் கைது செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. கல்வீச்சு சம்பவத்தில் அவனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவன் வாகன ஓட்டுநர்.''என்று கூறினார்.
 
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்த அறிவிப்பு, அதற்கடுத்த நாள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியானது.

``அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அவரை ஸ்ரீநகர் கொண்டு சென்றிருப்பதாக மூன்றாவது நாளில் தெரிவித்தனர். அவரை இங்கே கொண்டு வந்திருப்பதை, நிறைய முயற்சிகளுக்குப் பிறகு தான் அறிந்து கொண்டோம்'' என்று புல்வாமாவைச் சேர்ந்த அந்த ஆண் கூறினார்.

``ஆக்ராவுக்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி நான் வந்தேன். எங்கள் பகுதியைச் சேர்ந்த மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து `நற்சான்றிதழ் கடிதம்' பெற்று வருமாறு எங்களிடம் கூறினார்கள். அந்தக் கடிதத்தை வாங்கி வர நான் திரும்பவும் புல்வாமாவுக்கு சென்றேன். அதற்கு எனக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகியுள்ளது.''

``என் சகோதரனுக்கு 28 வயது. அவன் கலை மற்றும் கல்வித் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் படித்திருக்கிறான். ஆனால் இப்போது அந்த பட்டங்கள் எல்லாம் பயனற்று போய்விட்டன. அவன் சிறையில் இருக்கிறான்.''

ஸ்ரீநகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் இங்கே சிறை வைக்கப்பட்டுள்ளார். அவருடைய மனைவி அந்த ஹாலில் ஒரு மூலையில் அமர்ந்து காத்திருந்தார். தங்களைத் தனிமையில் விட்டால் போதும் என்பது போல அவர்களுடைய முகபாவனைகள் காட்டின.

அவருடைய மனைவி, தலையை வெள்ளை துப்பட்டாவில் மூடியிருந்தார். அழுது கொண்டிருந்த குழந்தைகளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.
BBC Tamil

சில நிமிடங்கள் கஷ்டப்பட்ட பிறகு அந்தப் பெண்மணி ஹாலுக்கு வெளியே சென்று 3 மண் பானைகளில் இருந்து தண்ணீர் எடுத்து தன் பாட்டிலை நிரப்பிக் கொண்டார்.

அவருடைய பதின்மவயது குழந்தைகள் நின்று சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தன. அவர்களின் முகங்களில் ஏராளமான கேள்விகள் இருந்தன.

தினக்கூலி வேலை பார்க்கும் ஏழைத் தொழிலாளி அப்துல் கனி, குல்காம் மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் ஆக்ராவுக்கு வந்துள்ளார். அவருடைய மகனும் ஒன்றுவிட்ட உறவினரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தேவையான ஆவணங்களை காஷ்மீரில் அதிகாரிகளிடம் இருந்து தாம் பெற்று வரவில்லை என்று அவர் கவலையில் இருந்தார்.

இந்தப் பயணத்துக்காக அவர் ரூ.10,000 செலவு செய்துள்ளார். மீண்டும் குல்காம் சென்று திரும்பி வருவதற்கு அதிகமாகச் செலவு பிடிக்கும்.

``கடிதம் வாங்கி வர வேண்டும் என்று எனக்குத் தெரியாது. அதிகாலை 2 மணிக்கு அவர்களைக் கைது செய்தார்கள். அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். பாதுகாப்பு படையினர் 3 - 4 வாகனங்களில் வந்தனர்'' என்று அவர் தெரிவித்தார்.

``அவனை ஏன் கைது செய்கிறோம் என்று யாரும் எங்களிடம் கூறவில்லை. அவன் ஒருபோதும் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டதில்லை.''

சில மணி நேரம் கழிந்தது. நுழைவாயில் வழியாகச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது.
காஷ்மீரி குடும்பங்களில் ஏறத்தாழ அனைவருமே புதிய ஆப்பிள்கள் கொண்டு வந்திருந்தனர்.

பழங்கள் புதியது போலவே இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களில் ஒருவர் ஒரு பெட்டியில் வாங்கி வந்திருந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை சாக்குப் பையில் போட்டுக் கொண்டு வருமாறு பாதுகாப்பு அலுவலர் கூறினார்.

தனது ஆதார் அடையாள அட்டையைக் காட்டி, அப்துல் கனி கெஞ்சியதைப் பார்த்து அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதித்தனர்.

``முடிந்தவரை பல கோரிக்கைகளை ஏற்க நாங்கள் முயற்சி செய்கிறோம். நீங்கள் ஆதார் அட்டையைக் காட்டினால் உள்ளே சென்று சந்திக்கலாம்'' என்று சிறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து, தனது மகன் மற்றும் உறவினரை சந்தித்து அரை மணி நேரம் பேசிய மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார் அப்துல் கனி.
BBC Tamil

``அவன் (மகன்) கவலையாக இருக்கிறான். வீட்டில் எல்லோரும் நலமாக இருப்பதாக அவனிடம் கூறினேன்'' என்று அவர் கூறினார்.

மாலை சுமார் 4 மணிக்கு, காத்திருப்போர் ஹால் காலியாகிவிட்டது. ஒரு பெண்ணும், ஓர் ஆணும் சிறை வாயிலை நோக்கி வேகமாக நடந்து வந்ததை நாங்கள் கவனித்தோம்.

அவர்கள் பாரமுல்லாவில் இருந்து வந்திருந்தனர். ஸ்ரீநகரில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று, வாடகைக் காரில் இங்கு வந்திருக்கிறார்கள்.

அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து 20 நிமிடம் சந்திக்க அனுமதி தரப்பட்டது.

``இன்னும் முன்னதாகவே வந்திருந்தால் 40 நிமிடம் வரை அனுமதித்திருப்போம் என்று சிறை அதிகாரிகள் கூறினர்'' என்று தாரிக் அஹமது தார் தெரிவித்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருடைய சகோதரருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறைவாசிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே அந்த நாளை விட்டால் தாரிக் ஆக்ராவில் நான்கு நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

``நான் அவனிடம் பேசினேன். அவனுடைய மனைவி, 3 பிள்ளைகள், வயதான பெற்றோர் ஆகியோர் அவனைக் காணாமல் தவிப்பில் உள்ளனர். அவர்களுக்கு சிரமமாக உள்ளது. இப்போது அவனை நான் பார்த்துவிட்டதால், அவன் நன்றாக இருப்பதாக அவர்களிடம் சொல்வேன்'' என்றார் தாரிக்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேனர் வைத்தவரை விட்டுவிட்டு போஸ்டர் ஒட்டியவரை கைது செய்வதா? விஜய் ரசிகர்கள் அதிருப்தி