இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் தொடராக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உயிராபத்து இருப்பதாக முன்னாள் ஐனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஐபக்ச எவ்வாறு முன்னரே அறிந்து கொண்டிருந்தார் என்ற விடயம் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் நாட்டில் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளும் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஐபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தமிழர் தரப்பு பிரதிநிதிகள் மீது திடிரென மகிந்த ராஐபக்ஷ கொண்ட இந்த அக்கறை தொடர்பாக இலங்கை ஊடகங்ளிலும் சமூக வலைத் தளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
அப்போது பேசிய அவர், "குண்டுத் தாக்குதலின் பின்னர் மட்டக்களப்பிற்கு வருமாறு மதகுரு ஒருவர் என்னை அழைத்திருந்தார். அதற்கமைய நானும் மட்டக்களப்புக்குச் சென்று உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்தேன். அந்த வேளையில் முன்னாள் ஐனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஐபக்ஷ என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அதன் போது எங்கு இருக்கிறீர்கள் என்றும் என்னுடைய பாதுகாப்பு எப்படியாக இருக்கிறதென்றும் என்னைக் கேட்டார். அது எனக்கு புதுமையாக இருந்தது. ஆனாலும் நான் மட்டக்களப்பில் இருப்பதாக பதிலளித்திருந்தேன். நான் அங்கிருப்பதாக கூறியது அவருக்கு வியப்பாக அமைந்தது மட்டுமல்லாமல் அவர் திகைத்துப் போயிருந்தார்.
அத்தோடு நீங்கள் தற்போது மட்டக்களப்பிலா இருக்கின்றீர்கள் என்று மறுபடியும் என்னைக் கேட்டார். ஏனெனில் நான் மட்டக்களப்பு சென்றது அவருக்குத் தெரியாது. ஆனாலும் அவர் தனக்கு தற்பொழுது சில தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அதில் என்னுடைய உயிருக்கும் ஆபத்துக்கள் ஏற்படக் கூடும் என்றவாறு என்னிடம் கூறியிருந்தார். மேலும் என்னுடைய பாதுகாப்பை தளர விட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்.
அதற்கு நானும் சரி என்று கூறிவிட்டு நான் சென்ற வேலைகளை அங்கு நிறைவு செய்துவிட்டு மட்டக்களப்பிலிருந்து திரும்பினேன். இதன் பின்னர் அடுத்த நாள் நான் அவரை நேரடியாகச் சந்தித்த போது ஏன் எனக்கு இப்படியாக எச்சரிக்கை விடுத்தீர்கள் என்றவாறு வினவிய போது தனக்குச் சில தகவல்கள் கிடைத்ததாகவும் அதில் என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைத்ததாகவும் கூறினார்.
அது மட்டுமல்லாமல் தனக்கு கிடைத்த தகவல்களை எனக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் அதனடிப்படையிலே அதனை என்னிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து அவருக்கு நான் நன்றியும் கூறினேன். ஆக இந்த விடயத்தில் இவ்வளவு மட்டும் தான் நடந்தது. இதனைவிட வேறெதுவும் நடக்கவில்லை.
நிலைமை இவ்வாறிருக்கையில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உண்மையில் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற பின்னர் நான் மட்டக்களப்பிற்குச் சென்றிருந்த நிலைமையில் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறதென்பது குறித்தே முன்னெச்சரிக்கையொன்றை மகிந்த ராஐபக்ச விடுத்திருந்ததார்.
குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் எவருக்கும் முன்னெச்சரிக்கை விடப்படவில்லை என்பதையும் அது தொடர்பில் எவருக்கும் தெரிந்திருக்கவும் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.