Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுக்ரேன் போர் நீட் தேர்வை விலக்கவேண்டிய தேவையை மீண்டும் உணர்த்துகிறது - மு.க.ஸ்டாலின்

யுக்ரேன் போர் நீட் தேர்வை விலக்கவேண்டிய தேவையை மீண்டும் உணர்த்துகிறது - மு.க.ஸ்டாலின்
, வியாழன், 3 மார்ச் 2022 (14:11 IST)
யுக்ரேனுக்கு மருத்துவம் படிக்கச் சென்று, போரில் உயிரிழந்த மாணவரின் துயர நிலை நீட் தேர்வு விலக்கப்படவேண்டியதின் அவசியத்தை மீண்டும் உணர்த்துகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 
இதுகுறித்து அவர் நேற்று, புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கட்டணம் செலுத்த முடியாமல் தனது கனவை நனவாக்க யுக்ரேன் நாட்டுக்குச் சென்று மருத்துவம் படித்த கர்நாடக மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
 
வெந்த புண்ணில் வேல்...
யுக்ரேனில் இருந்து வெளியேற முடியாமல், தங்களது மருத்துவக் கனவு என்ன ஆகுமோ என்ற கவலையில் மாணவர்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். உள்நாட்டில் படிக்க முடியாமல், வெளிநாடு சென்று படிக்க முற்பட்ட மாணவர்களின் ஆர்வத்தையும், அதற்காக கஷ்டப்பட்டு தங்களது சொத்துகளை விற்று சொந்த சேமிப்புகளை கரைத்து மேல்படிப்புக்கு யுக்ரேனுக்கு அனுப்பி வைத்த பெற்றோர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துகளை இந்திய அரசு வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். 
 
இந்திய அரசின் கருத்துகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் போடப்படும் பதிவுகள் அனைத்தும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளன.மேலும், பாஜகவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் இருப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டியது அனைவருக்குமான பிரதமரின் முக்கியக் கடமையாகும். யுக்ரேனில் தவித்து வருவோருக்கு நம்பிக்கை அளித்து அழைத்து வர வேண்டிய மிக முக்கிய காலகட்டம் என்பதை இந்திய அரசுக்கு நினைவூட்டுகிறேன்.
 
இப்போது வந்துள்ள யுக்ரேன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது. யுக்ரேன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள் என்று கேள்வி கேட்டு தர்க்கம் செய்வதற்கு ஏற்ற நேரமல்ல இது. யுக்ரேனில் சிக்கியுள்ள மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதும், உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக கோவில்களில் இருந்து ரூ.120 கோடி வாடகை: அமைச்சர் சேகர் பாபு தகவல்