Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒசாமா பின் லேடனின் மகன் உமர் பின்லேடன் தன் அப்பா பற்றி சொன்ன நெகிழ்ச்சித் தகவல் - உண்மைக்கதை

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (08:26 IST)
"முஸ்லிம் சமூகத்தில் நாய்கள் தடைசெய்யப்பட்டாலும், எனது கணவர் ஒசாமா பின்லேடன் ஐரோப்பாவில் இருந்து இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களை வரவழைத்தார். அவற்றின் பெயர், சஃபியர் மற்றும் ஜையர். அந்த நாய்களை தந்தை பாசமாக தடவிக்கொடுத்தார் என்று உமர் கார்த்தூனில் என்னிடம் சொன்னபோது நான் ஆச்சரியப்பட்டேன். ஆச்சரியம் என்னவென்றால், அவர் இஸ்லாத்தை பின்பற்றுபவர், அதில் முஸ்லிம்கள் நாய்களிடமிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்பதால் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.”
 
நஜ்வா பின்லேடன் ,”Growing Up Bin Laden: Osama's Wife and Son Take Us Inside Their Secret World" என்ற புத்தகத்தில் இதை எழுதியுள்ளார்.
 
ஒசாமா பின்லேடனின் முதல் மனைவி நஜ்வா இந்த புத்தகத்தை 2015இல் தனது மகன் உமர் பின்லேடன் மற்றும் எழுத்தாளர் ஜான் சைசூனுடன் சேர்ந்து எழுதினார்.
 
ஒசாமாவின் 'நாய்கள்' மீதான அன்பிற்கு பிறகு என்ன நடந்தது என்று 17 ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"ஒரு நாய் திருடு போனபோது வருத்தம் ஏற்பட்டது. ஆனால் மற்றொன்று சில மர்ம நோய்களால் மிகவும் கஷ்டப்பட்டது. இதன் காரணமாக அது திடீரென்று இறந்துபோனது" என்று நஜ்வா குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தப் புத்தகம் வெளியாகி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, உமர் பின்லேடன் 'தி சன்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தந்தை ஒசாமா பின்லேடன் நாய்கள் மீது ரசாயன ஆயுதங்களை சோதனை செய்ததாகக் கூறினார்.
 
பின்லேடனின் கூட்டாளிகள் ரசாயன ஆயுதங்களை சோதனை செய்ததாக 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபிறகு, பல தகவல்கள் வெளியாகின. "நான் இதைப் பார்த்தேன்" என்று உமர் கூறினார்.
 
"அவர்கள் அதை என் நாயின் மீது சோதித்தார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. அந்த கெட்ட நினைவுகளையெல்லாம் நான் மறக்க விரும்புகிறேன். எப்போதுமே அந்த நினைவு என்னை வாட்டுகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
உமர் தனது தந்தை மற்றும் குடும்பத்துடன் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்தபோது, ​​பாபி என்ற நாயை வைத்திருந்தார். காவலாளி நாயைப் போல் அதற்கு பயிற்சியும் அளித்தார். "அது மிக விரைவில் இறந்துபோனது. காரணம் யாருக்கும் தெரியாது" என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
உமர் பின்லேடன் யார்
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குளிர்கால இரவு. ஒசாமா பின்லேடனின் நான்காவது மகன் உமர், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையால் ’பெஸ்ட் செல்லர்’ எழுத்தாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புலனாய்வுப் பத்திரிக்கையாளருமான Guy Lawson ஐ டமாஸ்கஸில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வரும்படி கூறினார்.
 
ரோலிங் ஸ்டோன் இதழின் கவர் ஸ்டோரியான,"Osama's Son: The Dark, Twisted Journey of Omar Bin Laden" இல், " இரவு விடுதியில் பேஸ்மெண்டில் இருக்கும் பாரில் மங்கலான வெளிச்சம் இருந்தது. சுமார் ஒரு டஜன் அரபு ஆண்கள் விஸ்கியை பருகியபடி, pole dance ஐ பார்த்துக் கொண்டிருந்தனர். ’ரஷ்யப் பெண்கள். மிகவும் அழகானவர்கள், ஒருபொம்மையைப்போல’ என்று உமர் தனது குளிர்பானத்தைப் பருகிக்கொண்டே சொன்னார்,” என்று கை லாசன் எழுதியுள்ளார்.
 
கை லாசன் மற்றும் உமர் இடையேயான இந்த சந்திப்பின் போது, ​​ஒசாம் பின்லேடன் உயிருடன் இருந்தார். அவர் எங்கு மறைந்திருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. அந்த நேரத்தில் அவர் உலகின் மிகவும் தேடப்பட்ட பயங்கரவாதியாகவும் இருந்தார், அவரை அமெரிக்கா நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்தது.
 
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் உள்ள டோராபோரா மலைப்பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது இளைஞராக இருந்த உமரும் அவருடன் இருந்தார். 'குளோபல் ஜிஹாத்' க்கு உமரை தனது வாரிசாக ஒசாமா தேர்ந்தெடுத்தது நெருங்கிய வட்டாரத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும்.
 
ஆனால், 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்ட ஒசாமா பின்லேடன் உலகின் மிகவும் தேடப்படும் நபராக மாறுவதற்கு முன்பே, உமர் பின்லேடன் தனது தந்தையின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
 
தற்போது 41 வயதாகும் உமர் பின்லேடன், 1991 முதல் 1996 வரை தனது தந்தையுடன் சூடானில் வாழ்ந்தார். ஏனெனில் ஒசாமா செளதி அரேபியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. பின்னர் தனது தந்தையிடமிருந்து பிரிந்து சென்ற பிறகு உமர், அல்-காய்தா பயிற்சி முகாம்களில் தான் ஆயுதப் பயிற்சி எடுத்ததை ஒப்புக்கொண்டார்.
 
"Growing Up Bin Laden: Osama's Wife and Son Take Us Inside Their Secret World" என்ற தனது வாழ்க்கை வரலாற்றில், "பொதுமக்களைக் கொல்வதில் என்னை இணைத்துப்பார்க்க முடியாததால் நான் அல்-காய்தாவை விட்டு வெளியேறினேன். நான் வெளியேற விரும்பினேன். ஆனால் அதில் என் தந்தைக்கு மகிழ்ச்சி இல்லை. இருந்தாலும் அவர் எனக்கு விடை கொடுத்தார்,”என்று உமர் எழுதுகிறார்.
இதன்பிறகு, செளதி அரேபியாவுக்கு சென்று தொழிலில் ஈடுபட்ட உமர் பின்லேடன், பின்னர் 2006-ம் ஆண்டு ஐரோப்பா செல்ல நினைத்தார்.
 
உமரின் தனிப்பட்ட வாழ்க்கை
இதற்கிடையில் உமருக்கு திருமணமாகி பின்னர் விவாகரத்தும் நடந்தது. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
 
2006 ஆம் ஆண்டு உமர், தன்னைக்காட்டிலும் 24 வயது மூத்தவரான மற்றும் ஐந்து பேரக்குழந்தைகளை உடைய பிரிட்டிஷ் பிரஜையான ஜேன்ஸ் பெலிக்ஸ்-பிரவுனை எகிப்தில் சந்தித்தார்.
 
 
 
இருவரும் அங்கேயே திருமணம் செய்துகொண்டனர், மனைவிக்கு ஜைனா என்று அவர் பெயரிட்டார். பின்னர் ஜெட்டாவில் சில மாதங்கள் தங்கியிருந்தபிறகு அவர்கள் பிரிட்டனுக்குச் சென்றனர்.
 
உமர் தனது புத்தகத்தில், "ஐரோப்பாவுக்குச் செல்வதில் குடியுரிமை போன்ற சில சிரமங்கள் இருந்தன. ஆனால் எங்கள் திருமணத்திற்குப் பிறகு, வாழ்க்கைக்கு ஒரு புதிய திசை கிடைத்தது. வாழ்க்கையில் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை அறிய நான் என் மனதை ஆராய வேண்டியிருந்தது."என்று குறிப்பிடுகிறார்.
 
AP செய்தி முகமை 2008 இல், "உமர் அமைதிக்காக உழைக்க விரும்புகிறார், வேறு எதுவும் இல்லை" என்று தெரிவித்தது.
 
இதன் போது ​​உமர் சில நேர்காணல்களையும் அளித்தார். இது பின்லேடன் குடும்பம் மற்றும் பரஸ்பர உறவுகள் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கியது.
 
"என் தாத்தா முகமது பின் அவத் பின்லேடன் மிகவும் பணக்காரராக இருந்தார். அவர் அனுமதிக்கப்பட்ட நான்கு திருமணங்களையும் சில ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்வது அவரது வழக்கமாக இருந்தது. பின்னர் மீண்டும் வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்வார். இப்போது பல மனைவிகள் மற்றும் முன்னாள் மனைவிகள், பல குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். இதன் காரணமாக அவரால் எங்களுடன் ஒரு வலுவான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை,”என்று வேனிட்டி ஃபேர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், உமர் தெரிவித்துள்ளார்.
 
உமர் இப்போது பிரான்ஸின் நார்மண்டியில் தனது மனைவி ஜைனாவுடன் வசித்து வருகிறார்., மேலும் அவர் ஒரு தொழில்முறை ஓவியர். கலை மற்றும் அவருக்கு பிடித்த மலைகள் அவருக்கு சிகிச்சைக்கான மருந்தாகச் செயல்படுவதாக அவர் நம்புகிறார்.
 
தந்தை ஒஸாமா பற்றி உமர் சொன்னது என்ன?
பிரிட்டனின் 'தி சன்' நாளிதழுக்கு சமீபத்தில் உமர் அளித்த பேட்டியில், " 2011, மே 2 ஆம் தேதி அமெரிக்க கடற்படையினர் எனது தந்தையை பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் கொன்றதை கேள்விப்பட்டபோது ​​நான் கத்தாரில் இருந்தேன்" என்று கூறினார்.
 
இருப்பினும் தனது தந்தையின் உடலை அமெரிக்கா கடலில் வீசும் என தான் நினைக்கவில்லை என்று உமர் கூறுகிறார்.
 
"அவர்கள் என் தந்தையை என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. உடலை கடலில் வீசியதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை. அவர்கள் உடலை மக்களுக்கு காட்டுவதற்காக அமெரிக்காவிற்கு கொண்டு சென்றனர் என்று நான் நினைக்கிறேன்."என்று அவர் குறிப்பிட்டார்.
 
"அவர் ஒரு நல்ல தந்தை, ஆனால் எங்கள் பாதை வெவ்வேறானவை” என்று தனது தந்தையைப் பற்றி உமர் கடந்த காலத்தில் கூறியுள்ளார்.
 
ஆனால் 2010 ஆம் ஆண்டு இரவு டமாஸ்கஸ் பாரில், உமர் பின்லேடன், கை லாசனிடம் தன் மனதை திறந்து உரையாடினார்.
 
ரோலிங் ஸ்டோன் இதழின் "Osama's Son: The Dark, Twisted Journey of Omar Bin Laden", என்ற கவர் ஸ்டோரியில், "நான் இந்த ரஷ்ய போல் டேன்ஸர்களிடம் முன்பே பேசியிருக்கிறேன். நான் என் பெயரைச்சொன்னால் சில நேரங்களில் அவர்கள் அதை நம்பக்கூட மாட்டார்கள். வறுமையின் காரணமாக அவர்கள் இப்படி ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது எனக்குத்தெரியும். என் தந்தை அவர்களின் (ரஷ்யா) பொருளாதாரத்தை அழித்தார். இப்போது அமெரிக்கா மீதும் அதையே செய்கிறார்,” என்று உமர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments