பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் , அதிமுக வேட்பாளர் மகேந்திரனை விட 1,75,883 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்துள்ளார்; இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பொள்ளாச்சி விஷயம் இந்த தேர்தலில் பெரும் அளவு பிரதிப்பலித்திருப்பதே என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு ,பொள்ளாச்சி, வால்பாறை(தனி), உடுமலைப்பேட்டை, மடத்துகுளம் என ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதி. இத்தொகுதியில் இதுவரை நடந்த 17 மக்களவைத் தேர்தல்களில் அதிகமாக 7 முறை அதிமுக கட்சி தான் வென்றுள்ளது. 2009ம் ஆண்டு பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுகுமார், திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தினை விட 46000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2014ம் ஆண்டு நடை பெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மகேந்திரன், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியினை விட 1,65,263 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியினை பொறுத்தவரை, அதிகமுறை வென்ற கட்சி அதிமுக தான். 1977ல் இருந்து தொடர்ந்து , பொள்ளாச்சி சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக வென்றுள்ளது, இடையில் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மட்டும் திமுக ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. மீண்டும், 2001-ல் இருந்து தொடர்ந்து அதிமுக தான் வெற்றிபெற்று வந்தது.
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியிலும் 2001ல் இருந்து தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்றது. உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியிலும் 2001ல் இருந்து நடைபெற்ற நான்கு சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெற்றது.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், மக்களவை தொகுதியிலும் அதிகமுறை வெற்றி பெற்று இந்த பகுதிகளில் வலுவான கட்சியாக அதிமுக நிலைபெற்று இருந்தது.
அண்மையில் வெளியான பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் பொள்ளாச்சியில் மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி அதனை வீடியோ எடுத்து அந்த பெண்களை மிரட்டிவந்ததாக குற்றம் சாட்டப்பட்டு நான்கு பேர் மற்றும் புகார் அளித்தவர்களை தாக்கிய வழக்கில் அதிமுக கட்சி பொறுப்பில் இருந்த நபர் கைது செய்யப்பட்டதும் மக்களிடையே பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியது.
அரசு இந்த குற்றங்களை விசாரிப்பதில் தகுந்த முனைப்பு காண்பிக்கவில்லை என்பதே இந்த பகுதி மக்களின் பெரும் ஆதங்கமாக உள்ளது, அந்த கோபத்தின் எதிரொலியே தேர்தல் முடிவுகள் என்று இப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பிபிசி தமிழ் , அப்பகுதி பொதுமக்களிடம் பேசியது. பொள்ளாச்சி சம்பவம் தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார், நாச்சிமுத்து. "விலைவாசி ஏற்றம் போன்றவையெல்லாம் வேறு சிக்கல்கள். ஆனால் இது யாருடைய மனதிலும் எளிதில் தாக்கத்தினை ஏற்படுத்தும் உணர்வுப்பூர்வமான விஷயம். இந்த கோவம் பொள்ளாச்சி மக்களுக்கு மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே இருந்து இருக்கும், என்னை பொறுத்தவரையில் ஒரு 70 வயது முதியவனாக, இந்த மண்ணை நேசிப்பவனாக மிகுந்த வருத்தத்தில் இருக்கிறேன். இந்தப்பகுதியின் காலநிலை, நீர்வளம், ஆன்மிக தலங்கள் என பொள்ளாச்சிக்கு பல சிறப்புகள் இருக்கின்றன, ஆனால் இந்த மண்ணுக்கு தலைகுனிவு ஏற்படும்படி இப்படி நடந்துவிட்டதே என அப்பாவாக, தாத்தாவாக ஆழ்ந்த வருத்தம் எனக்கு இருக்கின்றது, என்னைப்போல பலருக்கும் அந்த வருத்தம் இருக்கின்றது" என்றார்.
"என்னுடைய தோழியர் பலரும் வழக்கமாக அதிமுகவிற்கு வாக்களிப்பவர்கள் இந்தமுறை மாற்றி வாக்களித்ததாகத்தான் தெரிவித்தனர், ஏனெனில் இந்த வழக்கினை ஆளுங்கட்சி சரியாக எடுத்து செல்லவில்லை என்பது பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளை வைத்துள்ள அனைவருமே இந்த முறை இதை மனதில் வைத்துத்தான் வாக்களித்துள்ளனர் என்கிறார்." உஷா.
"கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக வெற்றிபெற்றுள்ளது. இப்பகுதி அதிமுகவின் கோட்டையாக இருந்திருக்கின்றது.பொதுமக்கள் மத்தியில் ஆளுங்கட் சியின் மீது வெறுப்புணர்வை இந்த சம்பவம் ஏற்படுத்திவிட்டது என்கிறார்." அறவொளி.
இது குறித்து பேசிய பூபாளன் என்பவர், "நிச்சயமாக இந்த தேர்தல்முடிவுகளில் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது. இத்தனை ஆண்டுகள் கழித்து அரசியல் மாற்றம் வர அது ஒரு முதன்மை காரணி. இந்த குற்றங்களில் நேரடியாக அமைச்சரின் மகன் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று குற்றசாட்டுகள் வெளிவந்த போதும் அதற்கு வலிமையாக மறுப்பு தெரிவிக்கவில்லை, ஆளுங்கட்சியின் சார்பிலோ அல்லது அந்த அமைச்சரின் சார்பிலோ எந்த விதமான அறிக்கைகளும் வெளிவரவில்லை, மேலும் இந்த வழக்கில் எந்த நடவடிக்கைகளையும் ஆளுங்கட்சி துரிதப்படுத்தவில்லை என்பதும் மக்களிடையே சந்தேகத்தினை வலுப்படுத்திவிட்டது. குற்றமற்றவர் என்ற அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும், அல்லது குற்றவாளிகளின் மீதான நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கவேண்டும் . அது நடக்கவில்லை என்பது மக்களிடையே சந்தேகத்தினை வலுப்படுத்திவிட்டது." என்கிறார்.
இது பற்றி பேசிய கல்கி சுப்பிரமணியம் , "இந்த சம்பவத்தினை பொறுத்தவரை மக்கள் முதுகில் குத்தப்பட்டது போல் உணர்கிறாரர்கள், ஒரு அமைதியான, அழகான ஊருக்கு இப்படி தலைகுனிவு வந்துவிட்டதே என்ற வருத்தம் மக்களிடையே இருக்கின்றது. அதுவே இந்த தேர்தலில் எதிரொலித்துள்ளது என்கிறார்.
"திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தின் போது பொள்ளாச்சி சம்பவத்தைத்தான் பிரதானமாக கையிலெடுத்தார், பொள்ளாச்சியில் மட்டுமல்ல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பொள்ளாச்சி சம்பவம் குறித்து பிரசாரத்தில் பேசினார். பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொகுதியில் திமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் இந்த சம்பவமும், இதனை வாக்குசேகரிப்பின் போது அவர்கள் பயன்படுத்திக் கொண்டதும் நிச்சயம் உள்ளது. சேலம் எட்டுவழி சாலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கஜா புயல் மேலாண்மையில் தவறியது என பல சிக்கல்கள் அதிமுக மீது அதிருப்தியினை ஏற்படுத்தி இருந்த பொழுது இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மக்களின் எண்ணம்தான் அதிமுகவிற்கு எதிரான வாக்குகளாக மாறி திமுகவிற்கு வெற்றியினை பெற்று தந்துள்ளது." என்கிறார் சமூக ஆர்வலர் மதிகணேசன்.
"இருப்பினும் இப்பகுதி மக்கள் பெரும்பாலும் அதிமுக சார்புடையவர்கள், இத்துணை பிரச்சினைகளுக்கு இடையிலும் அதிமுக வேட்பாளர் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை இங்கு பெற்றுள்ளதை வைத்தே இதனை புரிந்து கொள்ளலாம்." என்கிறார் அவர்.
"திமுக மகளிரணி சார்பில் கனிமொழி களத்திற்கு நேரடியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டது போன்றவையும், ஆளுங்கட்சி இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தொய்வு காட்டுகிறது, வெளிப்படைத்தன்மை இல்லாமல் இயங்குகின்றது என்ற மக்களின் கவலை ஆகிய காரணங்களாலும் , பல ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது." என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.